நாடு முன்னேற 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தேவை - ஜி.கே.வாசன் அறிக்கை

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-01 16:00 GMT

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஓரே தேர்தல் நடத்தும் திட்டத்தை த.மா.கா முழு மனதுடன் வரவேற்கிறது. நாடு சீரான முன்னேற்றத்தை அடைய ஒரே நாடு, ஒரே தேர்தல் தேவை. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் போது பொதுச் செலவினங்கள் குறையும், சேமிப்பு கூடும், மற்றும் நாட்டின் பாதுகாப்பு படைகளை உகந்த முறையில் பயன்படுத்த இத்திட்டம் பயனளிக்கும்.

தற்பொழுது நமது தேசம் எப்பொழுதும் தேர்தல் நினைவிலேயே உள்ளது. மேலும் ஏதாவது ஒரு மாறிலத்தில் எல்லா நேரங்களிலும் மாறி, மாறி தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இது நிர்வாகத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. மேலும் மத்திய மற்றும் மாறில நலன்களின் திட்டமிடலை தாமதப்படுத்துகிறது.

இந்தியா சுதந்திர பெற்று 77-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேலையில், இந்தியாவை வருகிற 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற்றுவதை பாரதப் பிரதமர் தனது பணியாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நாம் அனைவரும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நிர்வாகத்தில், நீண்ட கால திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆளும் கட்சியும், எதிர்க் கட்சிகளும், மக்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்தி, நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்ல ஒரே நாடு, ஒரே தேர்தல் தேவை.

இத்திட்டத்தால் அனைத்து கட்சிகளும், நாட்டின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்த முடியும். இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த முயற்சியை தமிழ் மாநில காங்கிரஸ் முழு மனதுடன் வரவேற்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்