கோவையில் கார் வெடித்து சிதறிய வழக்கில் மேலும் ஒருவர் கைது: என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கியது

கோவையில் கார் வெடித்து சிதறிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவ்வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. தொடங்கி உள்ளது.

Update: 2022-10-27 23:41 GMT

கோவை,

கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி அதிகாலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சிலிண்டர்களுடன் கார் வெடிப்பு

2 கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு கார் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்ற என்ஜினீயரிங் பட்டதாரி பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனடியாக கோவை விரைந்து, இந்த வழக்கின் விசாரணையை முடுக்கி விட்டார். தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியபோது கார் வெடித்து கிடந்த இடத்தில் இரும்பு குண்டுகள், ஆணிகள் உள்ளிட்டவை கிடந்தது தெரிய வந்து அதிர வைத்தது.

5 பேர் கைது

பலியான ஜமேஷா முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி, அங்கு பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்களை கைப்பற்றினர். அவரது வீட்டின் அருகே இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அவருடன் மேலும் சிலர் சேர்ந்து ஒரு மூட்டையை எடுத்துச்சென்ற காட்சி பதிவாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ஜமேஷ் முபினுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிற முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 5 பேரை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டப்பிரிவின் (உபா) கீழ் போலீஸ் கைது செய்தது.

தமிழக அரசு பரிந்துரை

இதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உயர் மட்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில், தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, முதல்-அமைச்சரின் செயலாளர்-1 உதயச்சந்திரன், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. (நுண்ணறிவு) டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில், கோவை கார் வெடிப்பில் மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்பு உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

என்.ஐ.ஏ. விசாரணை

இந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ. டி.ஐ.ஜி.வந்தனா, சூப்பிரண்டு ஸ்ரீஜித் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோவை வந்தனர். கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து, இந்த வழக்கு தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர். வழக்கு தொடர்பான ஆவணங்களையும் கேட்டு பெற்றனர்.

வழக்குப்பதிவு

என்.ஐ.ஏ.அமைப்பினர் நேற்று இந்த சம்பவம் தொடர்பாக முறைப்படி வழ க்குப்பதிவு செய்தனர். என்.ஐ.ஏ. அமைப்புக்கு தமிழகத்தில் போலீஸ் நிலையம் கிடையாது. அவர்கள் தமிழகம் தொடர்பான வழக்குகளை கொச்சி அல்லது டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ.போலீஸ் நிலையங்களில்தான் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். கடந்த வாரம், சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள என்.ஐ.ஏ.தலைமை அலுவலகத்தில், போலீஸ் நிலையம் ஒன்றை தொடங்கினார்கள்.

அந்த போலீஸ் நிலையத்தில் முதல் வழக்காக, கோவை சம்பவம் பற்றி பதிவு செய்யப்பட்டது. கோவை தனிப்படை போலீசார் பதிவு செய்த வழக்கு அடிப்படையில் என்.ஐ.ஏ. அமைப்பினர் புதிய வழக்கை பதிவு செய்துள்ளதாகவும், உ.பா. சட்டப்பிரிவு இதில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடனடியாக இந்த வழக்கு தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ.தொடங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6-வது நபர் கைது

இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்திவந்தபோது, கோவை கோட்டைமேடு, வின்சென்ட் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வசித்துவரும் தனது பெரியப்பா மகன் அப்சர் கான் (28) வீட்டுக்கு ஜமேஷா முபின் அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அப்சர் கான் வீட்டில் தனிப்படையினர் நேற்று சோதனை நடத்தி மடிக்கணினி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில் கார் வெடிப்பு சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது.

இதையடுத்து அப்சர்கானை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். கோவை சம்பவத்தில் ஏற்கனவே 5 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் 6-வது நபராக அப்சர்கான் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள்

இவரும், ஜமேஷா முபினும் சேர்ந்து 'ஆன்லைன் ஷாப்பிங்' இணைய தளங்கள் மூலம் முன்பதிவு செய்து பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், சல்பர், சாக் பவுடர் ஆகியவற்றை ஒரு கிலோ, 2 கிலோ என்று சிறு சிறு அளவில் வெவ்வேறு பெயர்களில் வாங்கியுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு வாங்கிய வெடிபொருட்களை ஜமேஷா முபின் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். மேலும் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என்று யூடியூப் மூலம் பார்த்து அதற்கான செயல்களில் ஜமேஷாமுபின் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளில் இணையதள ஷாப்பிங் நிறுவனங்கள் மூலம் வெடிபொருட்கள் வாங்கியவர்கள் யார், யார்? என்ற பட்டியலை அளிக்குமாறு போலீசார் பிரபல ஷாப்பிங் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

4 பிரிவுகளில் வழக்கு

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

இதன்படி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120 (பி) கூட்டுசதி, 153 (ஏ) மத உணர்ச்சியை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, யு.ஏ.பி.ஏ. (உபா) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பிரிவு 16 மற்றும் 17 ஆகிய பிரிவுகளின் கீழ் கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின், மற்றும் இதற்கு உடந்தையாக இருந்து கைதான முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) அப்சர்கான் (28) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்