கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள் நடப்படும்; சத்தியமங்கலத்தில் எர்ணாவூர் நாராயணன் பேட்டி
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள் நடப்படும்; சத்தியமங்கலத்தில் எர்ணாவூர் நாராயணன் பேட்டி
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ்நாடு பனைதொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவரும், சமத்துவ மக்கள் கழக தலைவருமான எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 15 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது 5 கோடி மரங்கள் மட்டுமே உள்ளன. 10 கோடி மரங்கள் பல்வேறு பயன்பாட்டுக்காக வெட்டப்பட்டன. இதனை 15 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார். தொடர்ந்து கடற்கரையில் அமைந்துள்ள 14 மாவட்டங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு் ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை வருகிற 24-ந் தேதி தொடங்குகிறோம். தற்போது 50 லட்சம் பனை விதைகள் வரப்பெற்றுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் இருந்து 5 லட்சம் பனை விதைகள் தருவதாக கூறியுள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக பனைதொழிலாளர்கள் நல வாரியம் செயல்படாமல் இருந்து வந்தது. தற்போது வாரியம் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (அதாவது இன்று) தொடங்கி வைப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.