திருப்பூர் பனியன் நிறுவனத்திடம் கையாடல் செய்த ரூ.1 கோடி மீட்பு

திருப்பூர் பனியன் நிறுவனத்திடம் கையாடல் செய்த ரூ.1 கோடி மீட்பு

Update: 2022-10-13 15:55 GMT

திருப்பூர்

நூல் ஆர்டர் அனுப்பி வைப்பது போல் அமெரிக்காவில் இருந்து மின்னஞ்சல் மூலமாக திருப்பூர் பனியன் நிறுவனத்திடம் கையாடல் செய்த ரூ.1 கோடியே 7 லட்சத்தை திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மின்னஞ்சல் மூலம் பணம் கையாடல்

திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள பனியன் நிறுவனத்தின் வணிக பிரிவு மேலாளராக சீனிவாசன் (வயது 45) பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்துக்கு தேவையான நூலை அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து பெறுவதற்கு வர்த்தக தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நூல் ஆர்டர் கொடுத்து அதற்கு முன்பணமாக ரூ.1 கோடியே 7 லட்சத்தை வணிக மின்னஞ்சல் மூலமாக கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி சீனிவாசன் பணியாற்றி வரும் பனியன் நிறுவனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் அனுப்பி வைக்கப்பட்ட தொகை தங்களுக்கு வந்து சேரவில்லை என்று அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தினர் சீனிவாசனை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மின்னஞ்சலை சரிபார்த்தபோது, அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தை போல் போலியாக மின்னஞ்சல் முகவரி தயாரித்து மர்ம ஆசாமிகள் ரூ.1 கோடியே 7 லட்சத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.

ரூ.1 கோடியே 7 லட்சம் மீட்பு

இதைத்தொடர்ந்து சீனிவாசன், ஆன்லைன் மூலமாக சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டபோது, வணிக மின்னஞ்சல் மூலமாக கையாடல் செய்த மொத்த பணமும் அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சீனிவாசன் வரவு செலவு வைத்த வங்கியுடன் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க வங்கியிலேயே அந்த பணத்தை தடுத்து மீண்டும் ரூ.1 கோடியே 7 லட்சத்தை திருப்பூரில் உள்ள சீனிவாசன் பணியாற்றும் பனியன் நிறுவனத்தின் வங்கிக்கணக்கு நேற்று திரும்ப பெற்றுக்கொடுக்கப்பட்டது.

பாராட்டு

மேலும் அமெரிக்காவில் இருந்து கொண்டு, சீனிவாசன் பணியாற்றும் வணிக மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்து கையாடல் செய்த நபரின் வங்கிக்கணக்கு விவரங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அந்த வங்கிக்கணக்கு நபர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இன்டர்போல் போலீசாரின் உதவியை திருப்பூர் மாநகர போலீசார் நாடியுள்ளனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் ரபிக் சிக்கந்தர் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பாட்டினார்.

இலவச தொலைபேசி எண்

பொதுமக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து இதுபோல் பணம் கையாடல் செய்யப்பட்டது தெரிந்தவுடன் உடனடியாக 1930 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் என்.சி.ஆர்.பி. இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்ய வேண்டும். இதன்மூலமாக உடனடியாக திருடப்பட்ட பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. பண்டிகை காலம் என்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற உள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

----

Tags:    

மேலும் செய்திகள்