நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்துவது பொருத்தமற்ற செயல்- முத்தரசன்

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்துவது பொருத்தமற்ற செயல் என முத்தரசன் கூறினார்.

Update: 2023-01-17 19:15 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்துவது என்பது பொருத்தமற்ற செயலாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறை ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளின் அடிப்படையிலானது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சித்தாந்தத்தை கொண்டுவர நினைப்பது பொருத்தமற்றது. இதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முடிவை ஜெயலலிதா இருக்கும் வரை எதிர்த்து வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆதரிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? என தெரியவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் 2024-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று விடலாம் என்பது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். சொந்த கொள்கையை எல்லாம் கைவிட்டுவிட்டு பா.ஜனதா என்ன சொல்கிறதோ அதற்கு ஆமாம் போடுகிற கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் ஏ, பி என எந்த பிரிவாக இருந்தாலும் அவற்றை கலைத்துவிட்டு பா.ஜனதாவுடன் இணைந்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்