கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது
கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 38). இவர் சொந்தமாக கழிவுநீர் ஏற்றிச்செல்லும் வாகனம் வைத்து, வீடுகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுநீரை அகற்றும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அம்மாசத்திரத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் வழியாக ஜெயங்கொண்டம் சென்றபோது, அத்தனேரி பஸ் நிறுத்தம் அருகில் சிலர் கழிவுநீர் அகற்றும் வாகனத்தை மறித்து 'லிப்ட்' கேட்டுள்ளனர். இதையடுத்து ஆனந்த் வாகனத்தை மெதுவாக இயக்கியுள்ளார். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பெரிய வாளை எடுத்து டிரைவர் ஆனந்த் தலையில் வெட்ட முயன்றுள்ளனர். இதனால் சுதாரித்துக் கொண்ட ஆனந்த் லாவகமாக தலையை நகர்த்தியபோதும், அவரது விலா பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றார். மேலும் அவர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தா.பழூர் போலீசில் ஆனந்த் கொடுத்த புகாரில், அவரை வெட்ட வந்தது கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் சரவண நகரை சேர்ந்த சந்திரனின் மகன் அசோக்(30) என்று குறிப்பிட்டுள்ளார். அசோக் ஆனந்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பிரோதம் காரணமாக அசோக் மற்றும் அவருடன் 3 பேர் சேர்ந்து காத்திருந்து ஆனந்தை கொலை செய்ய முயன்றதாக, புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்நிலையில் நேற்று சிலால் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த விருத்தாசலம் கல்லூரி நகர் பகுதியை சேர்ந்த குமாரை(43) பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஆனந்தை கொலை செய்ய முயற்சி செய்த 4 பேரில் அவரும் ஒருவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர்.