புதுப்பிக்கப்பட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் குறித்தபொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

புதுப்பிக்கப்பட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-24 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் மீதான கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கருத்து கேட்பு கூட்டம்

இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை, 2019-ன்படி கடலோர மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் தயாரிக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட வரைவுகடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் மீது பொதுமக்களின் கருத்தை கேட்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாட்டுக்கான புதுப்பிக்கப்பட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சென்னை தேசிய நீடித்த மேலாண்மைக்கான மையம் மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் மற்றும் நில பயன்பாட்டு வரைபடங்கள் மீது தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக முத்துஅரங்கில் நடத்தப்படுவதாக இருந்தது.

ஒத்திவைப்பு

தற்போது, தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்பட இருந்த பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது. ஆகையால் இன்று நடைபெறுவதாக இருந்த கருத்து கேட்பு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்