36 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அரியலூரில் பாலத்தில் வெடிகுண்டு வைத்து ரெயிலை கவிழ்த்த பயங்கரவாதிகள்

36 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அரியலூரில் பாலத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து ரெயிலை கவிழ்த்தனர்.

Update: 2023-03-14 19:36 GMT

மலைக்கோட்டை விரைவு ரெயில்

அரியலூர் சில வரலாற்று பதிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று பாலத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து ரெயிலை கவிழ்த்த சம்பவம். இந்த சம்பவம் நடந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. அதாவது கடந்த 1987-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மலைக்கோட்டை விரைவு ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் அரியலூருக்கு மறுநாள் (15-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு அந்த வந்து நின்றது. ரெயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் அந்த ரெயிலில் ஏறிக்கொண்டும், ரெயிலில் வந்த பயணிகள் இறங்கிக்கொண்டும் இருந்தனர்.

சிறிது நேரத்தில் அரியலூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய ஊழியர், மருதையாற்று பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் பதற்றமடைந்த ரெயில்வே ஊழியர்கள், மலைக்கோட்டை விரைவு ரெயிலை நிறுத்தும் நோக்கில் நடைமேடைக்கு ஓடி வந்தனர். ஆனால் அந்த ரெயில் புறப்பட்டு சென்று சில நொடிகள் ஆகியிருந்தன. இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்ற பதைபதைப்புடன் அவர்கள் இருந்தனர்.

50-க்கும் மேற்பட்டோர் பலி

அதே நேரத்தில் அந்த ரெயில் அரியலூர்-சில்லக்குடி இடையே உள்ள மருதையாற்று ரெயில் பாலத்தில் வந்தது. அந்த பாலத்தின் மறுமுனையை என்ஜின் தொட்டபோது, திடீரென 'டமார்' என்ற பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த நொடி என்ஜின் தடம்புரண்டு பாலத்தின் அடியில் விழுந்தது. அதில் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகள், ஒன்றுடன் ஒன்று மோதியவாறும், சில பெட்டிகள் பாலத்தின் கீழ் தொங்கியவாறும், அலங்கோலமாக நின்றன. குறிப்பாக குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் நொறுங்கியிருந்தது. எங்கெங்கும் பயணிகளின் அபய குரலும், மரண ஓலமும் ஒலித்தன.

சிறிது நேரத்தில் பொழுது புலர்ந்தநிலையில், ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடந்ததை அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இ்ந்த சம்பவத்தில் அந்த ரெயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணித்த 36 பேர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

வெடிகுண்டு வைத்த பயங்கரவாதிகள்

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, அரியலூர் பகுதியில் 1980-ம் ஆண்டில் நக்சலைட் இயக்க பயங்கரவாதிகளில் அதிகமானவர்கள் தமிழர் விடுதலை படை என்ற அமைப்பை உருவாக்கினர். அதற்கு தமிழரசன் தலைமை தாங்கினார். இந்த இயக்கத்தினர், கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் வழங்க மறுத்ததை கண்டித்தும், இதனால் கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக்கூடாது, தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும், எனவே தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெடிகுண்டு வைத்து ரெயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினர்.

அதன்படி 1987-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி நள்ளிரவில் அரியலூர் -சில்லக்குடி இடையே மருதையாற்று ெரயில் பாலத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்தனர். அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு மின்வயரை இணைத்து, தங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெடிகுண்டை வெடிக்கச்செய்ய காத்திருந்தனர்.

தகவல் தெரிந்தும் பயனில்லை

ஆனால் இந்த செயலில், முரண்பட்ட கருத்தை கொண்ட அந்த இயக்கத்தை சேர்ந்த ஒருவர், அன்று நள்ளிரவு மருதையாற்றில் இருக்கும் ெரயில்வேக்கு சொந்தமான நீர் ஏற்றும் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியரிடம், ரெயிலை கவிழ்க்க வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்துவிட்டு, இணைப்பை துண்டித்துள்ளார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் உடனடியாக அரியலூர் ெரயில் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் ரெயில் புறப்பட்டு சென்றுவிட்டது. இதைத்தொடர்ந்து அந்த பாலத்தில் மலைக்கோட்டை விரைவு ெரயில் வந்தபோது, பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து, தங்கள் திட்டத்தை நிறைவேற்றிவிட்டனர். குண்டு வெடித்த அதிர்ச்சியில் ரெயில் பெட்டிகள் கவிழ்ந்தன, என்பது தெரியவந்தது.

அழியாத சுவடு

இந்தியாவிலேயே முதன்முதலில் பயங்கரவாதிகள், ரெயில் பாலத்தில் வெடிகுண்டை வெடிக்கச்செய்து பயணிகள் ரெயிலை கவிழ்த்து, அதில் அதிகமானவர்கள் இறந்தது இந்த சம்பவத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூரில் நடந்த இந்த சம்பவம் காலத்தால் அழியாத சுவடாக மாறிப்போனது.

Tags:    

மேலும் செய்திகள்