பங்குனி உத்திரத்தையொட்டி மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவிலில் மீனாட்சி-சுந்தரரேசுவரர் எழுந்தருளினர்

பங்குனி உத்திரத்தினத்தையொட்டி மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவிலில் மீனாட்சி-சுந்தரரேசுவரர் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

Update: 2023-04-05 22:44 GMT


பங்குனி உத்திரத்தினத்தையொட்டி மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவிலில் மீனாட்சி-சுந்தரரேசுவரர் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

திருவாப்புடையார் கோவில்

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நாளில் மீனாட்சி - சுந்தரேசுவரர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேசுவரர் திருக்கோவிலுக்கு சென்று திரும்புவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமி திருப்புவனத்திற்கு செல்லாமல் மதுரை வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள செல்லூர் திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளி காட்சி அளித்து வருகிறார்.

நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி மீனாட்சி, சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் குதிரை மற்றும் சிம்மாசனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து கிளம்பி செல்லூர் திருவாப்புடையார் கோவிலுக்கு சென்றார். அங்கு உச்சிகாலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடந்தது. பின்னர் மாலையில் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து மீண்டும் மீனாட்சி கோவிலை வந்தடைந்தனர்.

திருப்புவனத்திற்கு செல்லும் சுவாமி

இது குறித்து மீனாட்சி அம்மன் கோவில் செந்தில் பட்டர் கூறும் போது,

அந்தக்காலகட்டத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடைய வைகையாற்றில் இறங்கியே செல்ல வேண்டும். நாள் முழுவதும் திருப்புவனத்தில் இருந்துவிட்டு மீனாட்சியும் சுந்தரேசுவராகிய சொக்கநாதரும் இரவில் அர்த்தஜாம பூஜைக்கு மதுரை கோவிலுக்கு திரும்பிவிடுவது மரபாக இருந்தது. இந்த நிலையில் தினமும் மீனாட்சி கோவிலின் அர்த்தஜாம பூஜை மணி ஒலி கேட்ட பின்னரே மன்னர் திருமலை நாயக்கர் உறங்கச் செல்வது வழக்கம்.

அப்படி ஒரு பங்குனி உத்திர நாளன்று மீனாட்சி - சொக்கநாதர் திருப்பூவனம் எழுந்தருளிய பின், வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. ஆனால் சொக்கநாதரை எப்படியாவது மதுரைக்கு எழுந்தருளச் செய்து, அர்த்தஜாம பூஜையைத் தரிசிக்க ஆவல் கொண்டார் மன்னர். உடனடியாக ஊரில் முரசறைந்து வெள்ளம் கரை புரண்டோடும் வைகையாற்றில் மீனாட்சியையும் சொக்கநாதரையும் பத்திரமாகக் கரை சேர்த்து கோவிலுக்கு கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

வைகை ஆற்றில் வெள்ளம்

ஒரு சில வீரர்கள் ஆற்று வெள்ளத்தில் குதித்து வைகையை நீந்திக் கடந்து, மீனாட்சி- சொக்கநாதர் சிலைகளை வாகனத்தோடு தூக்கிக்கொண்டு நீந்தி, மிகவும் பத்திரமாக மதுரைக்குக் கொண்டு சேர்த்தனர்.அன்று அர்த்த ஜாம பூஜையும் தடையின்றி முறையாக நடைபெற்றது.இது கண்டு மனம் மகிழ்ந்த திருமலை நாயக்கர் மன்னர் மீனாட்சியையும் சொக்கரையும் வெள்ளத்தில் நீந்தி பத்திரமாகக் கொண்டு வந்தவர்களுக்கு ஒரு கிராமத்தையே பரிசாக அளித்தார். அர்த்தஜாம பூஜை தடையின்றி நடக்க உதவியதால் அந்தக் கிராமம் இன்றும் சாமநத்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

சொக்கர் ராத்தங்கார்

மேலும் மதுரைக்கு சொக்கநாதப் பெருமான் திரும்பியதால் "சொக்கர் ராத்தங்கார்" (சொக்கநாதர் இரவில் தங்க மாட்டார்) என்ற பழமொழி ஏற்பட்டுவிட்டது. இப்போதும், மதுரையை அடுத்துள்ள திருப்புவனம், சாமநத்தம் போன்ற ஊர்களுக்கு மணமான பெண்கள் சென்றால் அங்கு இரவில் தங்காமல் மதுரைக்குத் திரும்பி விடுவர். வற்புறுத்திச் சொன்னாலும் ஏதோ காரணம் கூறி புறப்பட்டு விடுவர். மூதாட்டிகள் இது கண்டு, "நீ என்ன மீனாட்சியா? ராத்தங்க மறுக்கிறாயே'' என்று கூறுவதுண்டாம்.

இதுபோன்று ஓரிரு முறை வைகை ஆற்றில் வெள்ளம் வரவே, திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சிக்குப் பின்னர் தொலைவில் உள்ள திருப்புவனத்திற்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, மதுரைக்கு அருகில் வைகை ஆற்றின் வடகரையில் உள்ள திருவாப்பனூர் எனும் திருவாப்புடையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் ஏற்பட்டது. இந்த திருவாப்புடையார் கோவிலும் ஒரு பாடல் பெற்ற தலமாகும். அன்றைய தினத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி உத்திர நாளோடு முடிவடையும் கோடை வசந்த விழாவில், பத்தாவது நாளான பங்குனி உத்திர நாளன்று மீனாட்சி சொக்கநாதர் திருவாப்பனூர் எனும் செல்லூர் திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளுகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்