தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகளை சுகாதாரமான முறையில் தயாரித்து விற்க வேண்டும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகளை சுகாதாரமான முறையில் தயாரித்து விற்க வேண்டும். இதை மீறினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-10-26 18:45 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களின் அவசியமானதாக விளங்கும் இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி உரிமம் அல்லது பதிவு சான்று கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

இனிப்பு மற்றும் கார வகைகளை கலப்படமில்லாமல் சுத்தமான பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். உணவு தயாரிக்க கலப்பட பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ (கலர் பவுடர்) பயன்படுத்தக்கூடாது. ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

சட்ட ரீதியான நடவடிக்கை

பொட்டலமிடப்படும் அனைத்து இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பாளரின் முகவரி, தயாரிப்பு நாள், காலாவதியாகும் நாள், தொகுதி எண் மற்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.-ன் உரிமம் அல்லது பதிவு எண் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத வகையில் பலகாரங்களை தூசிப்படாத வகையில் மூடி வைத்து சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும்.

இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால், உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி இருந்தால் அத்தகையை உணவு வணிகர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பண்டிகை காலத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறையின் பெயரை பயன்படுத்தி யாரேனும் உணவு பொருள் விற்பனை கடைகளில் ஆய்வு செய்வதாகவோ அல்லது தவறான நோக்கத்தில் அணுகினால், அந்த நபரின் அடையாள அட்டையினை வாங்கி சரி பார்த்த பிறகே நிறுவனத்திற்குள் ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும்.

புகார் தெரிவிக்கலாம்

பொதுமக்கள் சுகாதாரமான முறையில் மற்றும் தரமான உணவு பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். இது தொடர்பான புகார்கள் இருந்தால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. புகார் அளிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்