பக்ரீத் பண்டிகையையொட்டி நீலகிரியில், பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி, நீலகிரியில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஊட்டி: பக்ரீத் பண்டிகையையொட்டி, நீலகிரியில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை
முஸ்லிம்கள் மெக்காவில் புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதையொட்டியும், இப்ராஹிம் நபியின் தியாகத்தை வலியுறுத்தும் வகையிலும் உலகம் முழுவதும் ஹஜ் பெருநாள் என்ற பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்களின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் 10-வது நாள் இந்த பண்டிகை நடக்கும்.
அதன்படி நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி முஸ்லிம்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் அன்பு பரிமாறும் வகையில் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை முடிந்த பின்னர் ஆடு, மாடுகளை அறுத்து குர்பானி கொடுத்தனர். ஆடு தனி நபராகவும், மாடு கூட்டுக்குர்பானியாகவும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டு இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்துக்கொண்டனர். மற்ற இரண்டு பங்குகளை உறவினர்களுக்கும், ஏழை மக்களுக்கும் வழங்கினார்கள்.
அதன்படி ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இமாம் சுல்தான் ஆலம் தலைமையிலும், பிங்கர் போஸ்ட் பள்ளிவாசலில் இமாம் பக்ருதீன் தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
கோத்தகிரி, கூடலூர்
கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள பெரிய பள்ளி வாசலில் தலைமை இமாம் மவுலவி சதாம் உசேன் தலைமையில் நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதைபோல் ராம்சந்த் சதுக்கம் பகுதியில் உள்ள நூர் உல் மதரஸா பள்ளிவாசலில் தலைமை இமாம் மவுலவி சைபுதீன் தலைமையில் காலை 8.30 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் அரவேனு, கட்டப்பெட்டு, எஸ்.கைகாட்டி, கூக்கல் தொரை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
கூடலூர் பெரிய பள்ளிவாசலில் ஜமாலுதீன் மவுலவி தலைமையிலும், முஸ்லிம் ஆதரவற்றோர் இல்ல பள்ளிவாசலில் முகமது அலி தலைமையிலும், பழைய நீதிமன்ற சாலையில் உள்ள பள்ளிவாசலில் சிராபுதீன் தலைமையிலும், சின்ன பள்ளிவாசலில் அப்துல் காதர் தலைமையிலும், சிங்கம் பள்ளிவாசலில் பைசல் தலைமையிலும், அத்திப்பாளி பள்ளிவாசலில் அனிபா தலைமையிலும், மாக்கமூலாவில் சிகாபுதீன் தலைமையிலும், மச்சி கொல்லி மட்டம் அப்துல் ரகுமான் தலைமையிலும், தேவர் சோலையில் ஷெரில் தலைமையிலும், மேபீல்டு பள்ளிவாசலில் பைது தலைமையிலும், நிலக்கோட்டையில் அபூபக்கர் தலைமையிலும், நாடுகாணியில் அனிபா தலைமையிலும், எல்லமலையில் பசில் ரகுமான் தலைமையிலும், மசினகுடியில் செய்தலவி தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்தாண்டு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் பள்ளி வாசல்களில் எந்தவித கட்டுபாடும் இன்றி முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.