லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் விபத்தை ஏற்படுத்தும் பாறைகளை அகற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் விபத்தை ஏற்படுத்தும் பாறைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-12-01 18:45 GMT

கூடலூர் நகராட்சி 21-வது வார்டு பகுதியாக லோயர்கேம்ப் உள்ளது. தமிழக எல்லைப்பகுதியான இங்கு போலீஸ் மற்றும் வனத்துறை சோதனை சாவடிகள் உள்ளன. இங்கிருந்து குமுளி செல்வதற்கு வனப்பகுதியில் 6 கிலோ மீட்டம் தூரம் மலைப்பாதை அமைந்துள்ளது.

இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் தமிழ்நாட்டில் இருந்து தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அதிக அளவில் ஜீப்களும் சென்று வருகின்றன. சுற்றுலா பயணிகள், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றனர்.

இந்த மலைப்பாதையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சில இடங்களில் சாலைகள் குறுகலாகவும் உள்ளன. ஆங்காங்கே சில இடங்களில் பெரிய பாறைகள், மரங்கள் சாலையில் உருண்டு விழும் நிலையில் உள்ளன. குறிப்பாக 2-வது மேம்பாலத்தில் இருந்து இரைச்சல் பாலம் செல்லும் வழியில் பெரிய பாறை ஒன்று அங்குள்ள மரத்தின் பிடியில் சிக்கி உள்ளது. மழைக்காலங்களில் அங்கு மண்சரிவு ஏற்பட்டாலோ அல்லது மரம் முறிந்து விழுந்தாலோ பெரிய பாறை சாலையில் விழுந்துவிடும் நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு பெரிய பாறையை வெட்டி அகற்ற வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்