குமுளி மலைப்பாதையில்மோட்டார்சைக்கிள்-லாரி மோதல்; வியாபாரி படுகாயம்
குமுளி மலைப்பாதையில் மோட்டார்சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் வியாபாரி படுகாயம் அடைந்தார்.
கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் எல்.எப்.ரோடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 53). சமோசா வியாபாரி. நேற்று முன்தினம் இவர், லோயர்கேம்பில் இருந்து மோட்டார்சைக்கிளில் குமுளிக்கு சென்று கொண்டிருந்தார். காளியம்மன் கோவில் வளைவில் அமராவதி பாலம் அருகே வந்தபோது, குமுளியில் இருந்து கம்பம் நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.