ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீட்டு வழக்கு: ஏப். 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப். 3 ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் உடனடியாக மேல்முறையீடு செய்தனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மட்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரது மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வரவில்லை. இதுகுறித்து நீதிபதிகளிடம், அவர்களது வக்கீல்கள் முறையிட்டனர். இதையடுத்து அனைத்து வழக்குளையும், இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இரு நீதிபதிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதனை தொடர்ந்து தனி நீதிபதி முன் நடந்த விசாரணை குறித்து ஓபிஎஸ் தரப்பில் பி.எஸ்.ராமன் வாதிட்டு வருகிறார். என்னை கட்சியிலிருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி கூறியுள்ளார். என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டும் எப்படி சரியாகும். இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் பி.எஸ்.ராமன் வாதிட்டு வருகிறார்.
இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் இறுதி விசாரணையா? இடைக்கால நிவாரணமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.