2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம்

பவுர்ணமியையொட்டி 2-வது நாளாக நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-11-08 17:09 GMT



பவுர்ணமியையொட்டி 2-வது நாளாக நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விடிய, விடிய கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சுற்று பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வெள்ளம்போல் காட்சி அளித்தனர். பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

பக்தர்கள் சாமி தரிசனம்

பவுர்ணமி நேற்று மாலை 4.48 மணி வரை இருந்ததால் 2-ம் நாளாக நேற்று பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அப்போது அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் சாமி தாிசனம் செய்தனர். தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள ஒத்தவாடை தெருவை சுற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று இரவு வரை பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்