புரட்டாசி சனிக்கிழமையையொட்டிகோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Update: 2023-09-30 21:26 GMT

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கோட்டை பெருமாள்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை ஆகும். இதையொட்டி ஈரோடு மாநகரின் மைய பகுதியில் அமைந்துள்ள கோட்டை பெருமாள் (கஸ்தூரி அரங்கநாதர்) கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாமி தரிசனம்

முன்னதாக கோவில் நடை நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பால், தயிர், இளநீர், தேன், குங்குமம், சந்தனம், மஞ்சள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் உற்சவ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷம் நடந்தது. பின்னர் பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்து நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் ஈரோடு அருகே பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மங்களகிரி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் மலை படிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்