போடி நகராட்சி சார்பில்தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
போடி நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
போடி நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் போடி பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் தேவர் சிலை, ஸ்டேட் பேங்க் சாலை, காளியம்மன் கோவில் சாலை வழியாக ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின்போது மாணவர்களின் கோலாட்டம், சிலம்பாட்டம், நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் நகராட்சி பொறியாளர் குணசேகரன், நகராட்சி கவுன்சிலர்கள் சங்கர், முருகேசன், லதா, மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துப்புரவு அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், கணேசன், அகமது கபீர் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பிரசாந்த் ஆகியோர் செய்திருந்தனர்.