அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னரும் உச்சத்தில் இருக்கும் ஆம்னி பஸ் டிக்கெட் விலை
அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னரும் ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
சென்னை,
ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி தொடர் விடுமுறையால் வெளிமாவட்டங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர்.
அதனால் தனியார் பஸ்களின் கட்டணத்தை அதிகரிக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கைகளை வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில் அரசு பஸ்கள் மக்களின் சேவைக்காக இயங்குவது. ஆனால் ஆம்னி பஸ்கள் அப்படி அல்ல. அவர்களும் ஒரு தொழில் செய்கிறார்கள். அரசு பஸ் கட்டணத்துடன், ஆம்னி பஸ் கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம். பல்வேறு வித பஸ்களுக்கு வெவ்வேறு கட்டணம் நிர்ணயிக்க வேண்டிருப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஓரிரு நாட்களில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மக்களுக்கு பாதிப்பு வராத வகையில்தான் கட்டணம் நிர்ணயம் செய்து விரைவில் அறிவிப்பார்கள். ஆம்னி பஸ்சில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவது இல்லை.
அரசு பஸ்களில் பயணிக்காதவர்கள் ஆம்னி பஸ் கட்டணத்தை தெரிந்து கொண்டே முன்பதிவு செய்து செல்கின்றனர். பண்டிகை காலங்களில் தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னரும் ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் இணையத்தில் வெளியிட்ட டிக்கெட் விலையை காட்டிலும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.2,500 முதல் ரூ.3,999 வரை கட்டணமும், கோவை செல்ல ரூ. 2,800 முதல் ரூ. 3,200 வரையிலும் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது.
அரசு பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகள் சங்கம் சார்பில் வெளியான கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.