ஆம்னி பஸ்கள்-கார் அடுத்தடுத்து மோதல்; சிறுமி உள்பட 2 பேர் பலி
பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ்கள்-கார் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர்.
கார்-ஆம்னி பஸ் மோதல்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆம்னி பஸ் ஒன்று திருப்பூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது பாடாலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் பிரிவு சாலையில் இருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ், காரில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நடந்தவுடன் சாலையில் இருந்து பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தாமல் விபத்து குறித்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கிளீனர் பலி
இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சின் டிரைவர் கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த உத்திரமொழி (வயது 42) முன்னால் சாலையில் காரும், பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்ததை கண்டார். இதனால் அந்த வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக உத்திரமொழி திடீரென்று பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். இதனால் அந்த பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் தள்ளாடினர்.
இந்த நிலையில் அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு ஆம்னி பஸ், நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் அந்த பஸ்சின் முன்பக்கம் அமர்ந்திருந்த கிளீனர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, குருவம்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமியின் மகன் விஜய் (24) பஸ்சின் படிக்கட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் அந்த பஸ்சில் பயணம் செய்தவர்களும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டனர். இந்த விபத்தினால் அந்தப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றி தகவலறிந்த பாடாலூர் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பஸ் கிளீனர் விஜயின் உடல் பஸ்சின் பாகங்களுக்கிடையே சிக்கியிருந்ததால் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்த 12 பயணிகளை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
12 பேர் காயம்
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:-
திடீரென பிரேக் போட்டதில் உத்திரமொழி ஓட்டிச்சென்ற ஆம்னி பஸ்சில் பயணம் செய்த சென்னை திருவேற்காடு மகாலட்சுமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜ்மோகனின் மனைவி செல்வி (49), பின்னால் வந்து மோதிய பஸ்சின் டிரைவர் சிவகங்கை மாவட்டம், மாத்தூரை சோ்ந்த சோனை மகன் முருகன் (35), அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகளான காரைக்குடி தாலுகா, கழனிவாசலை சேர்ந்த சோனைமுத்துவின் மனைவி ராஜேஸ்வரி (48), மகள் சவுமியா (20), காரைக்குடியை சேர்ந்த பெருமாளின் மனைவி ஜோதிலட்சுமி (37), தேவகோட்டை தாலுகா, நகரமங்கலத்தை சேர்ந்த அப்துல் ஹமீதுவின் மனைவி பாத்திமா சோபியா (30), சிவகங்கையை சேர்ந்த மீனாட்சி சுந்தரத்தின் மனைவி உமையாள் (53), மாற்று டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அண்ணா நகரை சேர்ந்த ஜெயபாலன் (53), திருமயம் தாலுகா, ஒணங்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மனைவி கிருஷ்ணவேணி (32), காஞ்சீபுரம் எம்.ஜி.ஆர். சாலை, திருவள்ளுவர் நகரை சேர்ந்த பஷீர்கானின் மனைவி சைலானி (33), மகன் முகமது பஷீர் (9), மகள் பர்கான் (6) ஆகிய 12 பேர் காயமடைந்தனர்.
சிறுமியும் சாவு
இதில் சிறுமி பர்கான் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தாள். செல்வி மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.