சுத்தியலால் தாக்கி மூதாட்டி கொலை

நெமிலி அருகே பேத்தி சுத்தியலால் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். சிறுவன் படுகாயமடைந்தான்.

Update: 2023-08-24 18:47 GMT

தாய் வீட்டிற்கு வந்து சிகிச்சை

சென்னையை அடுத்த குமணன்சாவடியை சேர்ந்தவர் அரி. இவரது மனைவி செல்வி (வயது 45). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது தாய்வீட்டுக்கு வந்து தங்கி சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை செல்வியின் பாட்டி குள்ளம்மாள் (98) வீட்டில் இருந்தார். அவருடன் செல்வியின் சித்தப்பா கார்த்திகேயன் என்பவரின் மகன் வேல்முருகன் (2) குள்ளம்மாளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

சுத்தியலால் தாக்கி கொலை

அப்போது வீட்டுக்குள் வந்த மனநலம் பாதிக்கப்பட்ட செல்வி திடீரென்று தான் வைத்திருந்த இரும்பு சுத்தியலால் இருவரையும் தாக்கியுள்ளார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த குள்ளம்மாள், வேல்முருகன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு குள்ளம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுவனின் தாயார் வெண்ணிலா (24) நெமிலி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் செல்வியை போலீசார் பிடித்து அயனாவரம் மனநல காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் இதுக்குறித்து பாணாவரம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்