மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

ஊட்டியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-20 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மூதாட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தீட்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி சின்னம்மாள் (வயது 70). கூலித்தொழிலாளி. இவர்களது மகன் சேலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சின்னம்மாள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

நேற்று காலையில் சின்னம்மாளுடன் வேலைக்கு செல்பவர்கள், அவரது வீட்டு கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை. மேலும் வீட்டில் இருந்து புகை வந்ததுடன், கருகிய வாசனை வந்தது. பின்னர் இதுகுறித்து ஊட்டி தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மின் கசிவு

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அப்போது சின்னம்மாள் கட்டிலில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக தடயவியல் நிபுணர்கள் அங்கு தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அப்போது புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூதாட்டி மயங்கி விழுந்து இருக்கலாம். அதன் பின்னர் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி இறந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்