கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள்- கிராம மக்கள் வாக்குவாதம்
மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை,
மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மருத்துவக்கழிவு
நரிக்குடி ஒன்றியம் அ.முக்குளம் அருகே உண்டுறுமி கிடாக்குளத்தில் மருத்துவக்கழிவு எரியூட்டும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த ஆலையை மூடக்கோரி காரியாபட்டி, நரிக்குடி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகளை எடுத்துச் சென்ற லாரியிலிருந்து திடீரென கழிவு மூடை கீழே விழுந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மருத்துவ கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இப்பகுதியில் வராது என உத்தரவாதம் அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வாக்குவாதம்
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ. கல்யாண் குமார் தலைமையில் காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த முக்கிய பெரியோர்களை அழைத்து கருத்து கேட்பு கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒருமித்த கருத்தாக அனைவரும் மருத்துவ கழிவு ஆலையை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகளுக்கும், கிராம பெரியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து கூட்டத்தை நடத்தினர்.
கருத்து கேட்பு கூட்டம்
கருத்து கேட்பு கூட்டத்தில் கிராமப் பெரியவர்களின் கோரிக்கையையும், கோரிக்கை மனுக்களையும் ஆர்.டி.ஓ. கல்யாண் குமார் பெற்றுக் கொண்டு கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரிடம் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என கூறினார்.
கூட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண்கரட், காரியாபட்டி தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.