அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து சான்று வழங்க வேண்டும்
இயற்கை மரணம் அடையும் நபர்களுக்கு, அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்திசான்று வழங்க வேண்டும் என்று ஆற்காடு நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகராட்சி கூட்டம்
ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
ஆனந்தன்:- நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் தெரு விளக்குகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க வேண்டும். காவல்துறை சார்பாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அது போதுமானதாக இல்லை. எனவே நகராட்சி சார்பாகவும் கண்காணிப்பு கேமராக்களை தேவைபடும் இடங்களில் பொருத்த வேண்டும்.
பொன்.ராஜசேகர்:- தெருக்களில் வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி, மோட்டார் பழுது ஏற்பட்டால் பழுது பார்ப்பது இல்லை. நகராட்சி பணியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வதில்லை. நகராட்சியில் கடந்த ஆட்சி காலத்தில் டெண்டர் விஷயத்தில் ஊழல் நடந்துள்ளது. அதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
நேரில் சென்று...
தட்சிணாமூர்த்தி:- ஆற்காடு நகரில் பெரும்பாலான சாலை ஓரங்களில் தின்பண்ட கடைகள் அதிகமாக காணப்படுகிறது. சுகாதாரமற்ற முறையில் அஜினோமோட்டோ கலக்கப்பட்ட தின்பண்டங்கள் தான் அதிகமாக காணப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
செல்வம்:- வயது முதிர்வு காரணமாக இயற்கை மரணம் ஏற்படுகிறது. அதை பதிவுசெய்வதற்கு நகராட்சியில் டாக்டர் சான்று கேட்கின்றனர். அவ்வாறான சான்றுகள் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்து தான் பெற வேண்டும். இயற்கை மரணத்திற்கு சுகாதார ஆய்வாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து விசாரணை செய்து சான்று வழங்கலாம்.
சுகாதார ஆய்வாளர் பாஸ்கர்:- மருத்துவச் சான்று இருந்தால்தான் பதிவு செய்ய முடியும். உங்களுடைய கருத்தை அரசுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கிறோம்.
குணா:- ஆற்காடு பஜார் பகுதியில் புதிதாக சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலம் நகராட்சி மூலமாக அமைக்கப்பட்டதா அல்லது பொதுப்பணித் துறை மூலம் அமைக்கப்பட்டதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சிறு பாலம் கட்டும் பணிகளினால் சாலை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1 வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் பழுதடைந்துள்ளது.
திருநங்கைகள் தொல்லை
ராஜலட்சுமி துரை:- பஸ் நிலையத்தில் திருநங்கைகள் இடையூறு அதிகமாக உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் அதிக தொல்லை கொடுக்கின்றனர். இது குறித்து காவல்துறைக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காமாட்சி பாக்யராஜ்:- தோப்புக்கான தெற்கு தொடக்கப்பள்ளியில் கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அதனை இடித்து விட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, தொப்பி, கை உறை ஆகியவை வழங்க வேண்டும். மயான கொள்ளை திருவிழா வருவதால் தூய்மை பணிகள் முன்கூட்டியே செய்ய வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.