மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை- முத்திரையில்லாத 26 தராசுகள் பறிமுதல்

மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் முத்திரையில்லாத 26 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-12-18 19:34 GMT


மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் முத்திரையில்லாத 26 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மீன் மார்க்கெட்

தென் தமிழகத்தில் மிகப்பெரிய மீன் மார்க்கெட்டாக மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு ராமேசுவரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து வாங்கி செல்கின்றனர். இதற்காக அங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில், வியாபாரிகள் அரசு முத்திரையுடன் கூடிய தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால், கடந்த சில தினங்களாக, ஒரு சில வியாபாரிகள் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்தி வருவதாக தொழிலாளர் நலத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதிரடி சோதனை

அதன்பேரில், மதுரை மாவட்ட தொழிலாளர் துறை அமலாக்கபிரிவு உதவி கமிஷனர் மைவிழிசெல்வி தலைமையில் 25 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று காலை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகளில் அரசு முத்திரை உள்ளதா? என்பது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது.

இதில் 26 வியாபாரிகள் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்துவது தெரியவந்தது. அந்த தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் சோதனை நடத்திய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகளை கலைந்துபோக செய்தனர். இதைதொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

26 தராசுகள் பறிமுதல்

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள் அனைவரும் அரசு முத்திரையுடன் கூடிய தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை வியாபாரிகள் சரியாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்தியதாக 26 தராசுகளை பறிமுதல் செய்துள்ளோம். அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான நோட்டீசுகள் வழங்கப்பட்டு உள்ளன என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்