கோத்தகிரியில் 45 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

கோத்தகிரியில் 45 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, டிரைவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

Update: 2023-05-27 00:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் 45 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, டிரைவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் மாதம் 7 -ந் தேதி தொடங்க உள்ள நிலையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்காக இயக்கப்படும் தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தகுதி குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊட்டி மோட்டார் வாகன அலுவலகத்திற்குட்பட்ட கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியைச் சேர்ந்த 45 பள்ளி வாகனங்களின் தகுதிகள் குறித்து நேற்று வெஸ்ட்புரூக் பகுதியில் உள்ள ஜுட்ஸ் பள்ளி மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு சில வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை சற்று கீழாக பொருத்த வேண்டும் எனவும், வாகனங்களில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு கருவியில் வாகனத்தின் எண் மற்றும் தேதி கண்டிப்பாக எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்கள்

ஊட்டி வட்டார போக்கு வரத்து அலுவலர் தியாகராஜன், குன்னூர் ஆர்.டி.ஓ பூஷணகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயா, தாசில்தார் காயத்ரி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி, ஆங்கில பள்ளிகளின் கண்காணிப்பாளர் ரவி, தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்புசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் வருகிற 30-ந் தேதி மறு ஆய்விற்கு ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து மறு ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

செயல்முறை விளக்கம்

தொடர்ந்து தீயணைப்பு துறை சார்பில் வாகனங்களில் ஏற்படும் திடீர் தீ விபத்துகளின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ேமலும் டிரைவர்களுக்கு, பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள், தீயணைப்பான் கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டால் அவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை விளக்கிக் கூறி அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் டிரைவர்கள் தங்களது உடல் மற்றும் கண்களை அடிக்கடி பரிசோதித்து கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்