தஞ்சை உழவர் சந்தையில் அதிகாரிகள் ஆய்வு
தஞ்சை உழவர் சந்தையில் அதிகாரிகள் ஆய்வு
தஞ்சை உழவர் சந்தையில் 67 விவசாயிகள் மூலம் தினமும் 18 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உழவர் சந்தையில் முதல்-அமைச்சரின் முத்தாய்வு திட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
உழவர் சந்தையில் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சரின் முத்தாய்வு திட்ட வல்லுனர்கள் சேதுராமன், சண்முகபிரியா ஆகியோர் தஞ்சை வந்தனர். அவர்கள் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் தஞ்சை உழவர் சந்தை, ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த தென்னை வணிக வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் தஞ்சையில் இயங்கும் உழவர் சந்தை கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் தினமும், தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்கிறார்களா? என கேட்டறிந்தனர்.
18 டன் காய்கறி விற்பனை
ஆய்வில் விவசாயிகளின் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்வது, விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்வது மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், டான்ஹோடா விற்பனை நிலையம், இயற்கை வேளாண் பொருட்களுக்கான அங்காடி ஆகிய கடைகளில் ஆய்வு மேற்கொண்டு விற்பனை பற்றி கேட்டறிந்தனர்.
மேலும், காய்கறி கழிவுகளை உரமாக்கும் எந்திரம் மற்றும் மின்னணு விலைக்காட்சி பலகை ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
தஞ்சை உழவர் சந்தையில் உள்ள 71 கடைகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.6.9 லட்சம் மதிப்புள்ள 18.2 டன் காய்கறிகள் சராசரியாக 67 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் சராசரியாக 2,300 நுகர்வோர்கள் பயனடைகின்றனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்பட்டு வரும் திட்டங்கள், குளிர் பதன கிடங்கு மற்றும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த தென்னை வணிக வளாகத்தில் தென்னை மதிப்புக்கூட்டு எந்திரம் மையம் தொடர்பாக கள ஆய்வு மற்றும் இதர கடைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலத்தில் இயங்கிவரும் பேராவூரணி தென்னை அக்ரோ உற்பத்தியாளர் நிறுவன
எண்ணெய் எந்திரம் மையம், சூரிய உலர் கலன் மற்றும் அம்மாப்பேட்டை யில் இயங்கிவரும் ராஜராஜசோழன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது வேளாண் வணிக துணை இயக்குனர் வித்யா, செயலாளர் சுரேஷ்பாபு, வேளாண்மை அலுவலர்கள் ஜெய்ஜிபால், கனிமொழி, கண்காணிப்பாளர் முருகானந்தம், கண்காணிப்பாளர், மேலாளர் சித்தார்த்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் அமரேசன், மோனிஷா ஆகியோர் உடன் இருந்தனர்.