மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடவாச்சேரி, வல்லம்படுகை, பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், மேலக்குண்டலப்பாடி, அக்கரை ஜெயங்கொண்டப் பட்டினம், சிவபுரி, நடராஜபுரம், தெற்கு பிச்சாவரம், உத்தமசோழமங்கலம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பயிர்கள் அழுகி வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் கனகரப்பட்டு, ராதாவிளாகம், கீழச்சாவடி உள்பட பல்வேறு கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் நந்தினி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கண்ணன் மற்றும் ஹாஜா ஆகியோர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பகுதியில் மழை நீரால் பயிர்கள் பாதிக்கப்படுகிறது. தற்போது கான்சாகிப் வாய்க்கால் பாசன பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது. எனவே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை மற்றும் நிவாரண உதவி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.