மானாவாரி எள் சாகுபடியில் விதை தேர்வு குறித்து அதிகாரிகள் விளக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி எள் சாகுபடியில் விதை தேர்வு செய்வது குறித்து வேளாண்மை அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி எள் சாகுபடியில் விதை தேர்வு செய்வது குறித்து வேளாண்மை அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
இதுகுறித்து நெல்லை விதைப் பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா மற்றும் தூத்துக்குடி விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சேக் நூஹ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
எள் சாகுபடி
தமிழகத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலையை அடுத்து எள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் எள் சாகுபடி மூன்று முக்கியப் பட்டங்களில் செய்யப்படுகிறது. அதாவது, ஆடிப்பட்டம் (ஜூன் - ஜூலை), கார்த்திகை பட்டம் (அக்டோபர்- நவம்பர்) மற்றும் மாசிப்பட்டம் (பிப்ரவரி - மார்ச்) என்ற மூன்று பட்டங்களில் எள் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆடிப்பட்டம், கார்த்திகை பட்டங்களில் மானாவாரியாகவும், மாசிப் பட்டத்தில் இறவைப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி எள் சாகுபடி ஆடிப்பட்டத்தில் அதிக அளவு செய்யப்படுகிறது. பொதுவாக ஆடிப்பட்டத்தில் முன்பட்டத்தில் வறட்சியும், பின்பட்டத்தில் மழை பெறவும் வாய்ப்பு உள்ளது.
ரகங்கள்
எனவே, இந்த பட்டத்துக்கு வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய குறுகிய கால ரகங்களே சாகுபடி செய்ய ஏற்றவை. எனவே டி.எம்.வி. 3, 5, டி.எம்.வி. (எஸ்.வி.) 7, வி.ஆர்.ஐ. (எஸ்.வி.) 1 மற்றும் கோ 1 ரகங்களை பயிரிடலாம். தேர்வு செய்யப்படும் எள் ரகங்களுக்கு இனத்தூய்மை இன்றியமையாத ஒன்று ஆகும். நமது நாட்டு ரகங்கள் பொதுவாக நீண்ட காலப்பயிராகவும், இனத்தூய்மையின்றி கலவனாகவும், பூச்சி மற்றும் நோய்களை தாங்கும் தன்மை இல்லாததாலும் இவைகள் பயிரிடப்படும் போது செடிக்குச் செடி வயது வேறுபாடு வந்தும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு இலக்காகி விளைச்சல் மிகவும் பாதிக்கின்றன. எனவே, இனத்தூய்மை பெற்ற தேர்வு ரகங்களை உரிய நேரத்தில் சாகுபடி செய்தல் வேண்டும்.
அதிக மகசூல்
விதைக்கும் முன் மண்ணில் போதுமாக ஈரப்பதம் உள்ளதா என்பதை கணக்கிட்டு விதைத்தல் வேண்டும். விதைகளை சீராக எல்லா இடத்திலும் செடி வரும்படி விதைக்க வேண்டும். விதைத்த 20-ம் நாளில் 30 X 30 செ.மீ. இடைவெளியில் பயிரை களைத்தல் வேண்டும். இல்லாவிடில் செடிகள் குச்சிபோல் வளர்ந்து தாமதமாக பூக்க ஆரம்பிக்கும். விதைத்த 25-ம் நாளிலிருந்து 45-ம் நாள் வரை உள்ள பூக்கும் பருவத்தில் ஈரப்பதம் அவசியம் தேவை. காய்கள் பிடித்து முதிர்ச்சி அடையும் நேரத்தில் (விதைத்த 65-ம் நாளிலிருந்து) ஈரப்பதம் தேவையில்லை. இச்சமயத்தில் மழை பெய்தாலும் உடனே நீரை வடிகால் வசதி அமைத்து, வடித்துவிடுதல் வேண்டும். இல்லையென்றால் அதிக நீர் தேக்கத்தினால் காய்களிலுள்ள மணிகள் திரட்சியடையாமல் சிறுத்து பதராகிவிடும்.
எனவே, விவசாயிகள் சரியான ரகம் மற்றும் நீர் மேலாண்மை செய்வதன் மூலம் எள் பயிரில் அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.