தோவாளை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் அமைத்த மேற்கூரையை அகற்ற வந்த அதிகாரிகள்

தோவாளை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் அமைத்த மேற்கூரையை அதிகாரிகள் அகற்ற வந்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-22 21:50 GMT

ஆரல்வாய்மொழி:

தோவாளை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் அமைத்த மேற்கூரையை அதிகாரிகள் அகற்ற வந்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நடைபாதையில் மேற்கூரை

தோவாளையில் சுப்பிரமணியசாமி கோவில் மலை மீது உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக 4 இடங்களில் உபயதாரர் மூலம் தகரத்தால் ஆன மேற்கூரை அமைத்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அறநிலையத்துறை என்ஜினீயர் ராஜ்குமார், கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தன், ஸ்ரீகாரியம் சேர்மராஜா மற்றும் திருக்கோவில் ஊழியர்கள் அங்கு வந்து, அறநிலையத்துறையிடம் முறைப்படி அனுமதி பெறாமல் கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற வந்ததாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து உடன் வந்த தொழிலாளர்கள் கூரையை அகற்றும் பணியை தொடங்கினர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

அப்போது அங்கு பொதுமக்களும், விசுவ இந்து பரிஷத் மாநில இணைச்செயலாளர் காளியப்பன், பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், பக்தர்கள் சங்க தலைவர் லெட்சுமண பெருமாள் மற்றும் நிர்வாகிகள் வந்து மேற்கூரையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வும் அங்கு வந்தார். அவர் அதிகாரிகளிடம் பேசினார். அப்போது. அவர், 'நான் சென்னையில் உள்ள இணை ஆணையரிடம் பேசி, மேற்கூரை அமைக்க வாய்மொழி உத்தரவாக அனுமதி பெற்று கொடுத்தேன். அதன் பின்னர் தான் கூரை அமைக்கப்பட்டுள்ளது' என்றார். மேலும் இதுதொடர்பாக சென்னையில் உள்ள திருப்பணி இணை ஆணையர் ஜெயராமிடம் பேசினார். அதைத்தொடர்ந்து இணை ஆணையர் ஜெயராம் கூரையை அகற்ற வந்தவரிடம் பேசியதையடுத்து அதிகாரிகள் மேற்கூரையை அகற்றும் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

===

Tags:    

மேலும் செய்திகள்