வரி விதிப்பதற்காக வீடுகளை அளவீடு செய்ய மக்களிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

வரி விதிப்பதற்காக வீடுகளை அளவீடு செய்ய பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.

Update: 2022-10-21 18:45 GMT

கடலூர் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சுந்தரி தலைமை தாங்கி பேசினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சரவணன் (பா.ம.க.) :- கவுன் சிலர்களுக்கே தெரியாமல் அவர்களது வார்டுகளில் வார்டு குழுவிற்கு என 4 உறுப்பினர்களை நியமிக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

வீடுகளுக்கு வரி விதிப்பதற்காக அளவீடு செய்ய வரும் அதிகாரிகள் மக்களிடம் லஞ்சம் கேட்கிறார்கள்.

மேலும் லஞ்சம் கொடுக்காமல், அதிகாரிகள் எந்தவொரு பணியும் செய்வதில்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே குற்றச்சாட்டுகளை பல்வேறு கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

ஆணையாளர்:- அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தொடர்பாக உரிய ஆதாரம் ஏதேனும் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தரமில்லாத கல்வெர்ட்

சங்கீதா வசந்தராஜ் (அ.தி.மு.க.) :- எனது வார்டு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து கிடக்கிறது. மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. மேலும் மெயின்ரோட்டில் தரமின்றி கல்வெர்ட் (சிறுபாலம்) அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எனது கோரிக்கைகள் ஏதுவும் நிறைவேற்றப்படுவதில்லை.

மேயர் சுந்தரி:- மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை காரணமாக, பல்வேறு பணிகளை உடனுக்குடன் செய்ய முடியவில்லை. இதனால் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கீதா குணசேகரன் (தி.மு.க.) :- எனது வார்டில் உள்ள பெரும்பாலான மின்விளக்குகள் எரியவில்லை. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அதனால் குடிநீர் வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர் சுந்தரி:- கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

குடிநீர் வினியோகம்

முன்னதாக கூட்டத்தில் 19-வது வார்டு முத்துக்குமரன் காலனியில் ரூ.6.80 லட்சத்தில் குடிநீர் குழாய் பதித்திடும் பணியை மேற்கொள்வது, 33-வது வார்டு கொடிக்கால்குப்பம் பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதற்காக 3 ஆழ்துளை கிணறுகள் அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்