கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் காளான் வளர்ப்பில் ஈடுபட விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை

நீலகிரியில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு காளான் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-06-09 18:45 GMT

 ஊட்டி

நீலகிரியில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு காளான் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காளான் வளர்ப்பு

ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு நிறுவனம், நீலகிரியில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காளான் வளர்ப்பு மூலம் சுழல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான புதிய முயற்சியை எடுத்துள்ளது. இதன்படி இமாசலப் பிரதேசத்தில் உள்ள தேசிய காளான் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி சுதீர்குமார் அன்னேபு, ஊட்டியில் உள்ள மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மையத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான சுந்தராம்பாள் தலைமையிலான குழுவினர், ஆய்வு செய்து நீலகிரி மாவட்டத்தில் உண்ணக் கூடிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட காளான்களை பயிரிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தொிவித்து உள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சுந்தராம்பாள் கூறியதாவது:-

ஆராய்ச்சி

நீலகிரியில் தனியார் நிறுவன உதவியுடன் கடந்த ஆண்டு காளான் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள தொட்டன்னி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் முதல் பயிரான காளான்களை வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளனர்.இந்த நிலையில் தற்போது ஊட்டி மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன், பிரதான் மந்திரி க்ரிஷி சஞ்சய் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் விவசாயிகளை மையமாகக் கொண்ட தொடக்க தொழில்களாக இந்தச் செயல்பாட்டை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.அதாவது நீலகிரி மாவட்டத்தில் காய்கறி பயிர்களை பயிரிடுவதற்கு தொழு உரம் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. காளான் பயிருக்கு பிறகு உற்பத்தியாகும் கழிவுகளை தொழு உரத்திற்கு மாற்றாக பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் சுழல் உயிர் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். கிராமப்புறங்கள் அதிக மதிப்புள்ள சத்தான உணவை வழங்குவதோடு, விவசாயிகள் மட்டத்தில் காளான் வளர்ப்பை முதன்மை விவசாயத்துடன் ஒருங்கிணைத்தால் காய்கறி சாகுபடியில் இடுபொருட்கள் செலவை குறைக்க முடியும். விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஈடுபடலாம். ஊட்டியில் உள்ள மையத்தில் காளான் வளர்ப்பு மற்றும் மண்வள பாதுகாப்பில் அதன் சாத்தியமான பயன்பாடுகள் மூலம் வழங்கப்படும் காலநிலை நேர்மறையான பதில்களைக் கண்டறிய ஆராய்ச்சி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்