ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை அதிகாரியின் உதவியாளர் கைது
ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை அதிகாரியின் உதவியாளர் கைது
திருப்பூர்
திருப்பூரில் பொதுப்பணித்துறை மூலமாக கட்டிட மதிப்பீடு அறிக்கை அளிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். உதவி செயற்பொறியாளரை தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட மதிப்பீடு அறிக்கை
திருப்பூர்-மங்கலம் ரோடு பாரப்பாளையம் அய்யன் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதத்துக்கு முன்பு ரூ.74 லட்சம் மதிப்புள்ள சொத்தை திருப்பூர் நெருப்பெரிச்சலில் இணை பதிவாளர்-2 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார். இந்த பதிவுக்கு கட்டிடத்தின் மதிப்பீடு அறிக்கை அளிக்க, களப்பணிக்காக மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உள்பட 27 மாவட்டங்களுக்கான மதிப்பீடு அலுவலகம் இதுவாகும்.
கடந்த ஜனவரி மாதம் மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) ராமமூர்த்தி, திருப்பூரில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை கள ஆய்வு செய்து, அதற்கான மதிப்பீட்டு அறிக்கையை அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் இந்த மதிப்பீட்டு அறிக்கை அளிக்க, ரூ.1 லட்சம் லஞ்சமாக கோபாலகிருஷ்ணனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ரூ.75 ஆயிரத்துக்கு ஒப்புக்கொண்டார்.
லஞ்சம் பெற்றவர் கைது
இந்தநிலையில் கோபாலகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரையின்படி, ரூ.75 ஆயிரம் லஞ்ச பணத்தை கோபாலகிருஷ்ணன் வைத்திருந்தார். பின்னர் நேற்று உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி கூறியதின் பேரில், அவரது உதவியாளராக தனிநபர் குமார் (45) என்பவர் திருப்பூரை அடுத்த மங்கலத்துக்கு வந்திருந்தார். அவரிடம் கோபாலகிருஷ்ணன் ரூ.75 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்து கண்காணித்த திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் கையும், களவுமாக குமாரை பிடித்தனர்.
மேலும் அவர் வந்த காரை சோதனை செய்தபோது அந்த காருக்குள் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 48 ஆயிரம் இருந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி, குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, குமாரை கைது செய்தனர். ராமமூர்த்தியை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.