நாள்முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்
நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் நாள்முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் முதுநிலை கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு கடந்த ஆண்டில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து முதல்கட்டமாக, 10 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு 2022-2023-ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது நாமக்கல் நரசிம்ம சாமி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மற்றும் பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நாமக்கல்லில் உள்ள நரசிம்ம சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதையொட்டி நாமக்கல் நரசிம்ம சாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். இதில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் இளையராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.