கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்; 3 பேர் கைது

கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்; 3 பேர் கைது

Update: 2023-06-26 18:45 GMT

முத்துப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் நடத்தியது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த 24-ந் தேதி நடந்த கோவில் திருவிழாவில் இரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது.

இந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் கலைஞர்கள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கோவை அம்மன் நகர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு-புதுச்சேரி நடன கலைஞர் நல சங்க மாநில தலைவர் ராஜசேகரன் என்கிற அஜித் ராஜா என்பவர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகார்

புகாரில், கோர்ட்டு உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட கோவிலில் நிர்வாக கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆபாச நடனம் நடந்துள்ளது. எனவே இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது; சிறையில் அடைப்பு

விசாரணைக்கு பின்னர் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் நடத்தியது தொடர்பாக இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாகி கண்ணையன்(வயது 65), வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கீழக்காடு கிராமத்தை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கோபிநாத்(31), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆபாச நடனம் ஆடிய ரவிக்குமார்(26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்