அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-07-07 04:48 GMT

அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயிர் காக்கும் உன்னதப் பணியாக கருதப்படுவது மருத்துவப் பணி என்றால் அது மிகையாகாது. உடலிலுள்ள நோய்களை கண்டறிவது மட்டுமின்றி நோய்கள் மனிதரை அணுகாமல் இருப்பதற்கும் வழிவகை செய்யும் பணி மருத்துவப் பணி. இலட்சக்கணக்கான உயிர்கள் நீண்டநாள் வாழ்வதற்கு காரணமாய் அமைவது மருத்துவப் பணி. மருத்துவப் பணி இல்லையென்றால் உலகில் மனித இனம் என்றோ அழிந்திருக்கும். இப்படிப்பட்ட இன்றியமையாப் பணியை மேற்கொள்ளும் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் இல்லை என்ற சூழ்நிலையும், இருக்கின்ற மருத்துவர்களுக்கு உரிய ஊதியமோ, பதவி உயர்வோ தரப்படாத சூழ்நிலையும் கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது.

அண்மையில் அரசு மருத்துவர்களுக்கான பணி நேரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் பிரிவில் பணியாற்ற வேண்டிய நேரம் குறித்தும், உள் நோயாளிகளை 24 மணி நேரம் கண்காணிப்பது குறித்தும், பல் மருத்துவர்கள் மற்றும் உடலியக்க மருத்துவர்கள் பணியாற்றும் நேரம் குறித்தும் குறிப்பிட்டு, மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

மருத்துவர்கள் மருத்துவமனைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களை அரசு கேட்டுக் கொண்டிருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு கூடுதல் பல பொறுப்புகள் வழங்கப்பட்டு ஏற்கெனவே அவர்கள் அதிக நேரம் பணியாற்றி வருவதாகவும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த திறனாய்வுகளை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை.

ஏற்கெனவே மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பணி மாறுதல் அடிப்படையில் புதிய மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும், தொழிலாளர் சட்டப்படி, ஒரு வாரத்திற்கு 48 மணி நேர பணி என்றிருக்கின்ற நிலையில் அரசு மருத்துவர்கள் அதற்கும் மேலாக பணி புரிந்து வருவதாகவும், தற்போதைய சுற்றறிக்கையின்படி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களின் பணி இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே சமயத்தில், மத்திய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இணையான சலுகைகளை தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு வழங்கவில்லை என்றும், காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு குறித்த 354 அரசாணையை நடைமுறைப்படுத்தவில்லை என்றும், இதன் காரணமாக அரசு மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் என்றும் அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மருத்துவமனைகளில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமிக்கப்படாததுதான். இதன் காரணமாக மருத்துவர்கள் கூடுதல் பணிச் சுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.

அரசு மருத்துவமனைகள் சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டுமென்றால், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதும், புதிதாக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சென்னை கிண்டியில் துவங்கப்பட்டுள்ள உயர்தர சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட பலவற்றிற்கு புதிதாக மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவதும், அரசு மருத்துவர்களின் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு குறித்த 354 என்கிற அரசாணை நடைமுறைப்படுத்தப்படுவதும் மிகவும் அவசியம். பொதுமக்களின் நலனையும், மருத்துவர்களின் சேவையையும் கருத்தில் கொண்டு, இவற்றை நிறைவேற்ற முதல்-அமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்