மருத்துவ கல்வி இயக்ககம் முன்பு நர்சுகள் முற்றுகை போராட்டம்
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கக வளாகம் முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பேரிடர் காலகட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மருத்துவ பணியாளர் வாரியம் (எம்.ஆர்.பி) தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 தற்காலிக நர்சுகள், கடந்த 31-ந் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து நர்சுகள் தங்களை உடனடியாக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பரவலாக போராடி வருகிறார்கள். நேற்று முன்தினம் வள்ளுவர் கோட்டம் அருகே 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில், எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட நர்சுகள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககம் (டி.எம்.இ) முன்பு நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் செய்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொகுப்பு ஊதிய பணி
கையில் கோரிக்கை பதாகைகளுடன் நர்சுகள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சு காயத்திரி பேசும்போது, "கொரோனா பரவல் உச்சியில் இருந்த காலத்தில் நர்சுகள் தைரியமாக முன்னின்று மக்கள் உயிரை காப்பாற்றினோம். ஆனால் தமிழக அரசு எங்களை பணி நீக்கம் செய்தது வருத்தம் அளிக்கிறது. அதேபோல மீண்டும் 11 மாத காலத்துக்கு தற்காலிக பணியில் சேர சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 6 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறோம் எங்கள் போராட்டத்துக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும். முதல்-அமைச்சர் அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் எங்களை நேரடியாக சந்தித்து பேச வேண்டும். உடனடியாக பணி நிரந்தரம் செய்யாவிட்டாலும் குறைந்தப்பட்சம் தொகுப்பு ஊதியம் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் எங்களை பணியமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நர்சுகளின் திடீர் முற்றுகை போராட்டத்தால் கீழ்ப்பாக்கம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.