ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
தா.பழூர் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்டத்தின் சார்பில் எண்ணும் எழுத்தும் பயிற்சி தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெற்றது. பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலைய விரிவுரையாளர் பார்த்திபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் அசோகன், சாந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி, ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியினை ஆய்வு செய்து ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். தொடக்கநிலை மாணவர்கள் கற்றல் இடைவெளியை சரி செய்தல், தமிழக அரசு செயல்படுத்தி வரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 2-ம் பருவ பாடத்திட்டம் கற்பித்தல், துணைக்கருவிகள் தயாரித்தல், மாணவர்கள் கற்றல் திறன் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி மற்றும் கருத்துக்கள் வழங்கப்பட்டது. பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் இளவழகன், ஜெயசங்கர், சம்பத், அந்தோணி தாஸ், சிவா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட 244 தொடக்கநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.