'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
‘எண்ணும் எழுத்தும்' திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்.
சென்னை,
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 'எண்ணும் எழுத்தும்' திட்டமானது ஆரம்பக் கல்விக்கான ஒரு புதுமையான முன்னோடி அணுகுமுறையை கொண்டிருக்கிறது. அனுபவ ரீதியான கற்றலையும், சுய கண்டறிதல்களையும் சக மாணவர்களுடன் ஒருங்கிணைந்து கற்பதையும் இந்த திட்டம் ஊக்குவிக்கிறது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதில் நம்முடைய கூட்டு முயற்சியானது நம் மாணவர்களுக்கு ஈடுபாட்டை உருவாக்குவதிலும் பயனுள்ள கற்றல் அனுபவத்தை வழங்குவதிலும் இன்றியமையாததாகும்.
இதற்கான உங்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த ஆய்வுகளை விடாமுயற்சியுடன் நம் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த ஆய்வுகளுக்காக நீங்கள் பள்ளி பார்வை செயலியை பயன்படுத்தலாம். பள்ளி கல்வித்துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களும் முதன்மை கல்வி அலுவலர் முதல் வட்டார கல்வி அலுவலர் வரை, பள்ளிகளை தவறாமல் ஆய்வு செய்வதையும் வகுப்பறைகளை கண்காணிப்பதையும் பள்ளி பார்வை செயலியின் மூலம் நீங்கள் உறுதி செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.