கே.எஸ்.அழகிரிக்கு எதிராக பேசியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ்; நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேட்டி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக பேசியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்று நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக பேசியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்று நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பேசுகையில், ''முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 100 இடங்களில் காங்கிரஸ் கொடியேற்றி கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். காங்கிரஸ் தொண்டர்கள் எழுச்சியோடும், உற்சாகத்துடனும் பணியாற்ற வேண்டும்'' என்றார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆட்களை சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து சென்று பிரச்சினை ஏற்படுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட்ட அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது.
இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஒற்றுமைப்படுத்த முயற்சி மேற்கொள்வதற்காக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நோட்டீஸ்
பின்னர் மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ''நெல்லையில் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பேட்டி அளித்தவர்கள் யாருமே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், நிர்வாகிகள் என்ற போர்வையில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக பேட்டி அளித்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்படும்'' என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தாக்கியதாக கூறப்பட்ட அயன்சிங்கம்பட்டியை சேர்ந்த தனுஷ்கோடி கூறுகையில், ''மாநில தலைவர், எனது கன்னத்தில் தாக்கவில்லை. லேசாகதான் தட்டினார்'' என்றார்.