'தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை' கவர்னர் விளக்கம்
‘தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை' என்று கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கடந்த 4-ந்தேதி நடைபெற்ற விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ''இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால், அதை பல மாகாணங்களை சேர்ந்த அமெரிக்கா தேசம் போல சிலர் பார்க்கிறார்கள். அது தவறு. இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் சில அம்சங்களை தமிழகம் மட்டும் ஏற்க மறுக்கிறது. பாரத தேசத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்றே'' என்று கூறினார்.
கவர்னரின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சட்டசபையிலும் கண்டன குரல் எதிரொலித்தது. கடந்த 9-ந் தேதி சட்டசபையில் உரை நிகழ்த்திய கவர்னர் ஆர்.என்.ரவி, பல பகுதிகளை படிக்காமல் தவிர்த்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அன்றைய கூட்டத்தின் இறுதியில், அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து, அது நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
இதனால் கவர்னர் ஆர்.என்.ரவி, கூட்டம் முடியும் முன்பே வெளியேறினார். இது மரபு மீறிய செயல் என்று மேலும் கண்டன குரல் வலுத்தது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் ஆகியோர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை வழங்கினார்கள்.
மீண்டும் டெல்லி பயணம்
அந்த கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்துறைக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு கடந்த 13-ந்தேதி சென்றார். அங்கு, அவர் யாரையும் சந்திக்காமல் சென்னை திரும்பினார். இந்த நிலையில், நேற்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவி, மீண்டும் டெல்லி பயணம் மேற்கொண்டார். அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாக கவர்னர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியானது. அதில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொருத்தமான வெளிப்பாடு
கடந்த 4-ந்தேதி அன்று கவர்னர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த 'காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்வில் வரலாற்று பண்பாடு பற்றி பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க 'தமிழகம்' என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்றுப் பண்பாட்டு சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
தவறானது
எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்து கொள்கிறேன்.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல், கவர்னர் 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள், விவாதப் பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'தமிழ்நாடு' பிரச்சினைக்கு மத்தியில், அந்த வார்த்தையை தவிர்த்து வந்த கவர்னர், நேற்று தமிழ்நாடு என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்த தொடங்கினார். அவரது செய்திக்குறிப்பின் தொடக்கத்தில், 'கவர்னர் மாளிகை, தமிழ்நாடு' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், தமிழ்நாடு கவர்னர் என்றே அவரது பெயருக்கு முன்னால் போடப்பட்டு இருந்தது.