போதிய மழை இல்லை; அதிக காற்று வீசியதால் செண்டி பூக்கள் மகசூல் பாதிப்பு
தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போதிய அளவு மழைபெய்யாததாலும், அதிக காற்று காரணமாகவும் செண்டி பூக்கள் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய விலையும் கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போதிய அளவு மழைபெய்யாததாலும், அதிக காற்று காரணமாகவும் செண்டி பூக்கள் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய விலையும் கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, உளுந்து, பச்சை பயறு, வெற்றிலை, மக்காச்சோளம், எள், மரவள்ளிக்கிழங்கு, மற்றும் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பாபநாசம், சுவாமிமலை, அய்யம்பேட்டை பகுதிகளில் ரோஜாப் பூ, மல்லிகை, கனகாம்பரம் போன்ற பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி, அற்புதாம்பாள்புரம், குருங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் செண்டி பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
செண்டி பூக்கள் சாகுபடி
செண்டிப் பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மாலைகளை பெரும்பாலும் இறைவனுக்கு பயன்படுத்துவதில்லை. இருப்பினும் கிராமக் கோவில்களில் இவ்வகை மாலைகளை அனுமதிப்பார்கள். ஆனால் துக்க காரியங்களுக்கே இவ்வகை மாலைகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மூன்று மாத பயிரான செண்டிப்பூக்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆனால் தற்போது செண்டிப்பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மழை பொய்த்து போனதாலும், அதிக காற்று காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டுள்ளது. செண்டி பூக்கள் சாகுபடியை தொடங்கும் போதே ஒரு ஏக்கருக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான செண்டி பூக்கள் செடிகள் தேவைப்படுகிறது. ஒரு செண்டிப்பூ கன்று 2 ரூபாய் 20 காசு கொடுத்து வாங்கி நடவு செய்துள்ளனர். மேலும் உழவு, நடவுக்கான ஆட்கள் கூலி என ஆரம்பத்திலேயே ரூ.20 ஆயிரம் வரை முதலீடு செய்ய வேண்டி உள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக உரமிடுதல் செலவு, களை எடுப்பதற்கான ஆட்கள் கூலி என ஏக்கருக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது.
உரிய விலை இல்லை
ஆனால் தற்போது கிலோ 30 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய் விற்பனை செய்தால் மட்டுமே செலவு செய்த தொகையை எடுப்பதோடு, விவசாயிகளுக்கும் ஒரளவு லாபம் கிடைக்கும். அவ்வாறு செலவு செய்து பூக்களுக்கு உரிய விலை இல்லை என்றால் மொத்தமும் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், செண்டி பூக்கள் 3 மாத சாகுபடி பயிராகும். இந்த ஆண்டு போதிய மழை இல்லாததாலும், காற்று அதிகமாக வீசியதாலும் பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலையும் குறைவாக உள்ளது. இதனால் செலவு செய்த தொகை கிடைப்பதே சந்தேகமாக உள்ளது. தற்போது கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் தான் ஏற்படும். எனவே அரசு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், செண்டி பூ கன்று, உரம் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் இன்னும் அதிக அளவில் விவசாயிகள் செண்டி பூக்கள் சாகுபடி செய்ய முன்வருவார்கள். மேலும் செண்டி பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றனர்.