சிறையில் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல

சிறையில் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் கூறினார்.

Update: 2023-03-22 19:57 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,


சிறையில் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் கூறினார்.

புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிளை சிறைச்சாலையில் சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

இதில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) செல்வன் ஜேசுராஜா, சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி மற்றும் ஸ்ரீ வில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன், வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயராஜ், அரசு வழக்கறிஞர்கள் அன்னக்கொடி, ஜான்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் பேசியதாவது:-

நீங்கள் சிறையில் இருக்கும் நாட்களை பலன் உள்ளதாக கழிக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

குற்றவாளிகள் அல்ல

ஒருவர் சொல்லும் போது அவர் சொல்லுவது சரியா? தவறா? என்று ஆராய்ந்து பார்ப்பதற்கான மனநிலை நம்மிடம் இல்லை. அதற்கு அறியாமை தான் முக்கியமான காரணம்.

அந்த அறியாமையை போக்குவதற்கான ஒரு மிகச்சிறந்த ஏற்பாடு தான் இந்த நிகழ்ச்சி.

இது கடந்த ஒரு சில மாதங்களாக சிறைத்துறையில் ஏற்படுத்தக்கூடிய ஒரு மிகப்பெரிய மாற்றம். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் முதல் முறையாக சிறைத்துறையினர் சிறைவாசிகளுக்கு புத்தகங்களை வழங்கி படிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தனர். சிறையில் இருப்பவர்களை நாங்கள் என்றைக்குமே குற்றவாளிகளாக பார்ப்பதில்லை. நீங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

ரூ.1 லட்சம் புத்தகம்

நாங்கள் தீர்ப்பு கொடுத்த பிறகுதான் குற்றவாளியாக மாறுகிறீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாய்ப்பு கிடைக்கும் போது படியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வத்திராயிருப்பு வட்டார அலையன்ஸ் சங்கங்களின் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்ன மருது பாண்டியன் செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்