சேலத்தில் மளிகை கடைக்குள் புகுந்து துணிகரம்: ரூ.20 லட்சம் கேட்டு, வடமாநில வாலிபர் கடத்தல் காரில் தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

சேலத்தில் பட்டப்பகலில் மளிகை கடைக்குள் புகுந்து வடமாநில வாலிபரை ரூ.20 லட்சம் கேட்டு கும்பல் காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-06-02 22:07 GMT

சேலம்

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

வடமாநில வாலிபர்

சேலம் டவுன் பட்டைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாராம். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் சேலம் டவுன் சின்னக்கடைவீதி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவருடைய மகன் ஜெயராம் (வயது 22). இவர் நேற்று காலை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். காலை 6.45 மணி அளவில் அந்த பகுதிக்கு வேனில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மளிகை கடைக்குள் சென்று ஜெயராமிடம் பேசிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த கும்பல் திடீரென அவரை சட்டையை பிடித்து இழுத்து சென்று வேனில் ஏற்றி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றது.

தனிப்படை அமைப்பு

இந்த கடத்தல் சம்பவம் நடந்து நீண்ட நேரத்துக்கு பிறகு தான் சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர்கள் பாபு, அசோகன், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

பின்னர் வட மாநில வாலிபர் கடத்தல் தொடர்பாக அந்த பகுதியில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில், கடையில் ஜெயராம் இருந்த போது மர்ம கும்பல் உள்ளே புகுந்து அவரிடம் பேசி கொண்டிருந்தது மற்றும் அந்த கும்பல் ஜெயராமின் சட்டையை பிடித்து இழுத்து செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.

அதன் அடிப்படையில் வாலிபரை கடத்தி சென்ற கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். அவர்கள் அந்த கும்பலை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்

இதற்கிடையில் அந்த கும்பல் ஜெயராமின் செல்போன் எண்ணில் இருந்து மூலாராமிடம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ரூ.20 லட்சம் கொடுத்தால் உங்கள் மகனை விடுவிப்பதாக அவரிடம் அந்த கும்பல் கூறி உள்ளதாக தகவல் பரவியது. அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டியது உண்மையா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டவுன் போலீஸ் நிலையத்தில் மூலாராம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மூலாராம் கடையில் ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவர் சமீபத்தில் வேலையில் இருந்து நின்று விட்டார்.

பரபரப்பு

முன்னதாக சுரேஷிடம் இருந்து ஜெயராம் ரூ.1¾ லட்சம் மற்றும் கார் ஆகியவற்றை திருச்செங்கோட்டை சேர்ந்த ஒருவருக்கு வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் சுரேசுக்கு அதனை திருப்பி கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் வந்து ஜெயராமிடம், கொடுத்த பணம் மற்றும் காரை அவரிடம் இருந்து திரும்பி வாங்கி கொடு என்று கூறி கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

செல்போன் எண்ணின் டவரை வைத்து ஆய்வு செய்ததில் அது பெங்களூருவை காட்டுகிறது. இதனால் அந்த கும்பல் ஜெயராமை பெங்களூருவுக்கு கடத்தி சென்றிருக்கலாம் என்று கருதுகிறோம். அவரை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

சேலத்தில் பட்டப்பகலில் மளிகை கடைக்குள் புகுந்து வடமாநில வாலிபரை ஒரு கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்