170 பவுன் நகை கொள்ளையில் வடமாநில வாலிபர் கைது

குஜிலியம்பாறை அருகே சிமெண்டு ஆலை அதிகாரி வீட்டில் 170 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவத்தில் வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-04 20:17 IST

170 பவுன் நகை கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கரிக்காலியில் தனியார் சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலையின் முதுநிலை மேலாளராக திருநாவுக்கரசு (வயது 55) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், ஆலைக்கு அருகே உள்ள அலுவலர்கள் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 21-ந்தேதி திருநாவுக்கரசு, தனது குடும்பத்தினருடன் கரூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து அங்கிருந்த 170 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதேபோல் அருகே வசித்து வருகிற உதவி பொதுமேலாளர்கள் செந்தில் (42), பாஸ்கர் (43) ஆகியோர் வீடுகளின் பூட்டை உடைத்து முறையே ரூ.10 ஆயிரம், ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றனர். மற்றொரு உதவி பொதுமேலாளர் வேல்முருகன் (59) வீட்டின் பூட்டை உடைத்தும் மர்ம நபர்கள் திருட முயன்றனர்.

வடமாநில வாலிபர் கைது

இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கிராஜா, சரத்குமார் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் பதிவான கைரேகையை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி தனிப்படை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், மத்தியபிரதேசத்தை சேர்ந்த கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டம் பகோலி பகுதிக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். பின்னர் அங்கு பதுங்கியிருந்த பாயாமெர்சிங் பாப்ரியா (30) என்பவரை உள்ளூர் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஒரு பவுன் நகை மட்டுமே மீட்பு

பாயாமெர்சிங் பாப்ரியா வீட்டில் இருந்த நகையை போலீசார் சோதனை செய்தனர். அது, கரிக்காலியில் திருடுபோன சிமெண்டு ஆலை அதிகாரி வீட்டில் இருந்தது என்று தெரியவந்தது.

அவரிடம் இருந்து ஒரு பவுன் நகையை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் பாயாமெர்சிங் பாப்ரியா, குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பாயாமெர்சிங் பாப்ரியா மீது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஏற்கனவே திருட்டு வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபர், நகைகளை பிரித்து பலரிடம் கொடுத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்