பாதுகாப்பு பணிகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

திருவண்ணாமயைில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணிகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி ஆய்வு செய்தார்.

Update: 2022-09-23 16:46 GMT

திருவண்ணாமயைில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணிகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி ஆய்வு செய்தார்.

போலீசார் கண்காணிப்பு

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் நேற்று மெகா சோதனை நடத்தப்பட்டது. இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மையமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் பாப்பிலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் இன்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்கின்றனர்.

இன்று மாலை புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி பாதுகாப்பு பணிகள் குறித்து திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கோவிலில் சாமி சன்னதி, அம்மன் சன்னதி, கிளி கோபுரம், ராஜகோபுரம் பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கூறுகையில், பாதுகாப்பு பணிகள் குறித்து சாதாரண ஆய்வு தான் என்றார்.

அப்போது திருவண்ணாமலை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சுப்பிரமணி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

வாகன சோதனை

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் போலீசார் பாதுகாப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

தொடர்ந்து இரவில் தீவிர ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்