கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-09 12:57 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (பால்வளம்) அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

ஆர்பாட்டத்தின் போது விவசாயிகள் 2 பேர் மாடு தவிடு, புண்ணாக்கு, கழனி அருந்துவது போன்று செய்து காண்பித்தனர்.

பின்னர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் லிட்டர் செட் அளவீடு மாற்றி எடை அளவு எந்திரத்தில் பால் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து அவர்கள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 577 பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 400 சங்கங்களில் லிட்டர் செட் அளவீடு உள்ளது.

இதனை மாற்றி எடை அளவு எந்திரத்தில் பால் வாங்க வேண்டும். மேலும் பால் பகுப்பாய்வு மேற்கொண்டு கொழுப்பு அடிப்படையில் பால் வாங்க வேண்டும். தவிடு புண்ணாக்கு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

இதில் விவசாயிகள் நாத்தாம்பூண்டி சிவா, சம்பத், பாண்டித்துரை, சக்திவேல், தேவ்ராஜ், பஞ்சநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்