சிதம்பரம், பண்ருட்டி, வடலூரில் செயல்படாத உழவர் சந்தைகள்
சிதம்பரம், பண்ருட்டி, வடலூரில் செயல்படாத உழவர் சந்தைகள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோாிக்கை விடுக்கின்றனா்.;
விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவித்த காய்கறிகள், பழங்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டுவதற்காக தமிழகத்தில் கடந்த 1999-2000-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. வேளாண்மை துறையின் தோட்டக்கலை துறை மூலம் இந்த உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம் வரவேற்பு
இந்த உழவர் சந்தைகள் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், சில இடங்களில் மாலை 6 மணி வரையும் செயல்படுகிறது. விவசாயிகள் விளைவித்த பொருட்களை கொண்டு வர இலவச பஸ் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைகளில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனித்தனி இடம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கென தனி அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அட்டை இல்லாத வியாபாரிகளும் விற்பனை செய்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த உழவர் சந்தையில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விலைப்பட்டியல் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டு இருக்கும். குறிப்பாக இந்த உழவர் சந்தைகளில் வெளி சந்தையை விட காய்கறி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
குறிப்பாக வெண்டை, கத்திரி, தக்காளி, முருங்கைக்காய், தேங்காய், வாழைத்தார், கீரைகள் போன்றவை குறைந்த விலையில் கிடைத்து வருகிறது. ஆனால் சில இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படாமல் உள்ளது. தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளதால், இதில் கூடுதல் கவனம் செலுத்தி செயல்படாத உழவர் சந்தைகளை செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
செயல்படாத உழவர் சந்தைகள்
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சியிலும், பண்ருட்டி, வடலூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய நகராட்சிகளிலும் உழவர் சந்தைகள் உள்ளன. இதில் சிதம்பரம், பண்ருட்டி, வடலூர் ஆகிய 3 இடங்களில் உள்ள உழவர் சந்தைகள் பராமரிப்பின்றி செயல்படாமல் உள்ளது. சிதம்பரத்தில் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே உழவர் சந்தை மூடப்பட்டது. சில ஆண்டுகள் வேன் நிறுத்தும் இடமாகவும் இருந்தது. தற்போது தான் அந்த உழவர் சந்தையை மேம்படுத்த ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தை விரைந்து முடித்து திறக்க வேண்டும்.
வடலூரில் உள்ள சென்னை சாலையில் 15 கடைகளுடன் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள், காய்கறிகளை உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் நாளடைவில் அதிகாரிகள் அக்கறையின்மை காரணமாகவும், தொடர்ந்து கொரோனா நோய் பரவல் காரணமாகவும் உழவர் சந்தைக்கு பெரும்பாலான விவசாயிகள் வரவில்லை. இதனால் பொதுமக்களும் வருவதை நிறுத்தி விட்டனர். நோய் தொற்று குறைந்து சகஜ நிலைக்கு வந்தும், யாரும் உழவர் சந்தைக்கு வருவதில்லை. ஒரே ஒரு கடை மட்டும் தற்போது செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தை பராமிப்பின்றி உள்ளது. அதிகாரிகள் காலையில் வந்தவுடன் எப்போது மதியம் வரும் வீட்டுக்கு செல்லலாம் என்று பணி செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நகரத்தில் அமைக்க வேண்டும்
பண்ருட்டியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலையில் உள்ள தட்டான்சாவடியில் உழவர் சந்தை அமைக்கப்பட்டதால், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு சென்று வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் திறக்கப்பட்ட 6 மாதத்தில் உழவர் சந்தை பொலிவிழந்தது. பொதுமக்களும், பண்ருட்டி நகரத்திலேயே காய்கறி, பழங்களை வாங்க தொடங்கி விட்டனர். இதனால் உழவர் சந்தையில் கடை வைத்த விவசாயிகள் செய்வதறியாது தவித்தனர். பின்னர் அவர்களும் வருவதை நிறுத்தியதால், உழவர் சந்தை மூடப்பட்டது. உழவர் சந்தையை நகரில் மையப்பகுதியில் அமைத்தால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். அதே சமயம் உழவர் சந்தை குறித்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டு்ம். உழவர் சந்தை செயல்பட்டு விவசாயிகள் வாழ்வில் ஒளி வீச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.
அடிப்படை வசதி இல்லை
கடலூர், விருத்தாசலத்தில் மட்டும் உழவர் சந்தைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு நகரத்தின் மத்திய பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளதே காரணம். கடலூரில் 98 கடைகள் உள்ளன. தற்போது 120 கடைகள் கட்டும் பணி, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி, கழிவறை வசதி அமைக்கும் பணி ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தையாக செயல்படுகிறது. இங்கு அடிப்படை வசதியின்றி விவசாயிகள் தவிக்கின்றனர். அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு
விருத்தாசலம் உழவர் சந்தையில் 48 கடைகள் உள்ளன. பண்டிகை காலங்களில் மட்டும் அனைத்து கடைகளும் செயல்படும். மற்ற நாட்களில் 25 முதல் 30 கடைகள் தான் செயல்படும். உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டாலும் மண் தரையாக இருப்பதால் மழைக்காலங்களில் உழவர் சந்தைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. உழவர் சந்தை முன்பு ஆக்கிரமிப்புகள் உள்ளதால் மோட்டார் சைக்கிளை வெளியில் விடாமல் உள்ளே கொண்டு வரும் நிலை உள்ளது. இது விவசாயிகள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தற்போது இந்த உழவர் சந்தையில் மக்கும், மக்காத குப்பையாக பிரித்து உரம் தயாரிக்கும் கூடம் ரூ.12 லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் இருந்து 40 நாட்களில் கம்போஸ்ட் உரம் தயாரித்து கிலோ ரூ.10 என விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இந்த வளாகத்தில் பழம், காய்கறிகள் கெட்டுப்போகாமல் தடுக்கும் வகையில் சோலார் வசதியுடன் கூடிய குளிர் பதன கிடங்கு அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. மதியம் 1 மணி வரை மட்டுமே உழவர் சந்தை செயல்படும் என்பதால் ஒரு மணிக்கு மேல் இங்கு இருக்கும் விவசாயிகள் பாலக்கரை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்கின்றனர். ஆகவே உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
இது பற்றி உழவர் சந்தையை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
பொதுமக்கள் வருவதில்லை
பண்ருட்டி திருவதிகையை சேர்ந்த விவசாயி மரகதஅம்மாள்:- எங்களது தோட்டத்தில் இருக்கும் கத்திரிக்காய், வெண்டைக்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகளை 2 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த உழவர் சந்தைக்கு இலவச பஸ்சில் ஏற்றி சென்றாலும், அங்கு பொதுமக்கள் வருவதில்லை. வியாபாரம் இல்லாமல் எத்தனை நாட்கள் இருப்பது, நகரில் உள்ள ரத்தினம்பிள்ளை மார்க்கெட்டிற்கு வந்து விற்பனை செய்வது போல இந்த உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முடியவில்லை. பொதுமக்கள் வர முடியாத இடத்தில் உழவர் சந்தை அமைத்தால் எப்படி?
சிதம்பரத்தை சேர்ந்த ராமலிங்கம்:- போதிய கடைகள் இல்லாததால் மக்கள் அதிக அளவில் வரவில்லை. தற்போது உழவர் சந்தை கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய நவீன மார்க்கெட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிந்தவுடன் விவசாயிகள் அதிக அளவில் காய்கறி விற்பனை செய்யும்போது பொதுமக்களின் வருகையும் அதிகமாக இருக்கும்.
விருத்தாசலம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் நறுமணத்தை சேர்ந்த கிரேசி:-
சலுகைகள்
உழவர் சந்தை ஆரம்பித்த நாளில் இருந்து வியாபாரம் செய்து வருகிறேன். என் சொந்த நிலத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் மற்ற விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை பெற்று வியாபாரம் செய்கிறேன். எங்களுக்கு அரசு அடையாள அட்டை, இலவச பஸ் வசதி, தராசு இலவசம், கடை இலவசம் என அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இங்கு வியாபாரம் செய்வதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. இன்னும் அதிக அளவில் மக்கள் வந்து இயற்கையாக கிடைக்கும் விவசாய விளைபொருட்களை வாங்கி பயனடைந்தால் எங்களது வருமானமும் உயரும்.
புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர்:- இங்கே பழங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கிடைக்கிறது. காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை விவசாயிகளே விளைவித்து நேரடியாக எடுத்து வந்து விற்பனை செய்வதால் எவ்வித அச்சமும் இன்றி பயன்படுத்த முடியும். விருத்தாசலம் பாலக்கரை நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்பவர்களால் உழவர் சந்தையில் வியாபாரம் குறைந்து வருகிறது. பாலக்கரையில் நடந்து சென்று வரும் மக்கள் அங்கேயே வாங்கி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் உழவர் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பழங்கள் காய்கறிகள் உடனடியாக வீணாகி விடுகிறது. நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுத்து நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றினால் உழவர் சந்தை சிறப்பாக செயல்படும் என்றார்.
மேம்படுத்த வேண்டும்
வடலூரில் கடை வைத்திருக்கும் மஞ்சு:- நான் காய்கறி வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். கடைகள் குறைவு என்பதால் மக்கள் வருகையும் குறைந்து விட்டது. விவசாயிகள் சாலையோரம் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி, இதை மேம்படுத்தினால் கடைகள் அதிகமாகி, மக்களும் காய்கறிகள் வாங்க வருவார்கள்.
கடலூர் புஷ்பராஜ்:- உழவர் சந்தையில் அனைத்து காய்கறிகளும் கிடைக்கிறது. ஆனால் சில காய்கறிகளின் விலை வெளி சந்தையை விட அதிகமாக இருக்கிறது. இதை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
கடலூர் உழவர் சந்தையில் காய்கறி விற்கும் ரோஜா:- நான் உழவர் சந்தை ஆரம்பித்ததில் இ்ருந்து காய்கறி விற்கிறேன். உழவர் சந்தையில் வேலை நடப்பதால், எங்களை மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு மாற்றி விட்டார்கள். ஆனால் இங்கு கொசுக்கடியால் தவிக்கிறோம். மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. போதிய வியாபாரமும் இல்லை. கட்டிட பணியை முடித்து உழவர் சந்தைக்கே எங்களை அனுப்ப வேண்டும்.