டெமு, மெமு ரெயில்கள் இயக்க பரிந்துரைக்கப்படும்-மதுரை கோட்ட மேலாளர் அனந்த் தகவல்
மதுரை-கோவை மீட்டர்கேஜ் பாதையில் இயக்கிய ரெயில்களை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் டெமு, மெமு ரெயில்கள் இயக்க பரிந்துரைக்கப்படும் எனவும் கோட்ட மேலாளர் அனந்த் தெரிவித்தார்.
மதுரை-கோவை மீட்டர்கேஜ் பாதையில் இயக்கிய ரெயில்களை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் டெமு, மெமு ரெயில்கள் இயக்க பரிந்துரைக்கப்படும் எனவும் கோட்ட மேலாளர் அனந்த் தெரிவித்தார்.
சவால்கள்
மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அனந்த் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில்வே துறையானது ரெயில்கள் இயக்கும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, ரெயில் தண்டவாளங்களில் விரிசலை கண்டுபிடிப்பது, தண்டவாளங்களின் திறனை கண்காணிப்பது, புறநகர் ரெயில் போக்குவரத்தில் விபத்தில்லாமல் அதிக ரெயில்களை இயக்குவது, துல்லியமாக ரெயில் பாதையை ஆய்வு செய்யும் தொழில்நுட்பம், அதிக எடையை தாங்கும் சரக்கு ரெயில் பெட்டிகளுக்கு நெகிழ்வு அடுக்கு, மின்சார ரெயில்பாதைகளை கண்காணிப்பது, உப்பு போன்ற பொருட்களை ஏற்றி செல்வதற்கு வசதியான எடை குறைவான சரக்கு ரெயில் பெட்டிகள் தயாரிப்பது, தண்டவாளத்தை பலப்படுத்தும் சரளை கற்களை சுத்தப்படுத்தும் எந்திரம், ஊழியர்களுக்கான முன் பயிற்சி மற்றும் தன்னிலை அலுவல் கால பயிற்சி, ரெயில்வே பாலங்களை ஆய்வு செய்ய புதிய தொழில்நுட்பம், பயணிகளின் சேவையை மேம்படுத்த ஆன்லைன் புள்ளி விவரங்களை பகுப்பாய்வதற்கான தொழில்நுட்பம் ஆகியன தேவைப்படுகிறது.
இதற்கான தொழில்நுட்பம் மற்றும் செயலிகளை உருவாக்க புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற தொழில்நுட்ப ரீதியலான சவால்களை எதிர்கொள்ள ரெயில்வேக்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இது குறித்த விரிவான தகவல்களை www.innovation.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். உற்பத்தி தொடர்பான முதலீட்டு நிறுவனங்களுக்கு 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். அதாவது, சவால்களை எதிர்கொள்ள ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப கருவிகளை வழங்கும் புதிய நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். இந்த ஆலோசனை இந்திய ரெயில்வே முழுவதும் செயல்படுத்தப்படும். கருவிகளை பொறுத்தமட்டில், காப்புரிமை வழங்கப்படும்.
பயணிகளின் வசதி
மதுரை - தேனி ரெயில் பாதையில் போடிநாயக்கனூர் வரையிலான அகலப்பாதை பணிகள் முடிந்த பிறகு புதிய ெரயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
ரெயில்வே கொள்கை முடிவின் படி, பயணிகளின் சிரமத்தை தவிர்ப்பதற்காக நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரெயில்கள் செல்லும் பாதையில் உள்ள சிறிய ரெயில் நிலையங்களில் உள்ள நிறுத்தங்கள் நீக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ரெயில்கள் வருவதற்கு அரை மணி நேரம் முன்னதாக விளக்குகளை ஒளிரவிட வேண்டும், மின்சார சேமிப்புக்காக இரவு முழுவதும் விளக்குகளை ஒளிரவிடக்கூடாது என ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் இரவு நேரங்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக விளக்குகள் தேவைப்படும் ரெயில் நிலையங்கள் பற்றி பயணிகள் கோரிக்கை வைக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
டெமு, மெமு ரெயில்கள்
மதுரை கோட்டத்தில் உள்ள பல்வேறு ரெயில் நிலையங்களில் பிளாட்பாரங்களை உயர்த்துவது, நீட்டிப்பது, ரெயில் நிலைய மேற்கூரை அமைப்பது, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது போன்ற பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
மதுரை கோட்டம் முழுவதும் ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டவுடன், குறைந்த தொலைவு மற்றும் 200 கி.மீ. தொலைவுக்கு டெமு, மெமு ரெயில்கள் இயக்க பரிந்துரைக்கப்படும். திருமங்கலம்-தூத்துக்குடி, நெல்லை இரட்டை அகலப்பாதையில் தற்போது 90 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சாத்தியமில்லை
மதுரை-திருமங்கலம் இடையேயான அகலப்பாதைப்பணிகள் முழுமை அடைந்தவுடன் அந்த பாதையில்மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும். மதுரை-கோவை இடையே மீட்டர் கேஜ் பாதையில் இயக்கிய ரெயில்களை தற்போது இயக்குவதற்கு கோவை ரெயில் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. சேலம் கோட்டம் தயாராக இருந்தால், தென்னக ரெயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தின் அனுமதி கிடைத்துவிடும். அதுவரையில் ரெயில்கள் இயக்குவதற்கு சாத்தியமில்லை.
கோட்ட நிர்வாகம் சார்பாக தேஜஸ் ரெயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம் வழங்க பலமுறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, முதுநிலை கோட்ட என்ஜினீயர் நாராயணன், முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், உதவி வர்த்தக மேலாளர் பிரமோத் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) ராதா ஆகியோர் உடனிருந்தனர்.