நாகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
நாகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
நாகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மோகா புயல்
அந்தமான் அருகே தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்நிலை உருவானது. இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து நேற்று புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு மோகா என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் இன்று (வெள்ளிக்கிழமை) மிகத்தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
2-ம் எண் கூண்டு
இந்த புயல் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிற 14-ந் தேதி காலை வங்கதேசம்-மியான்மர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மோகா புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் இந்த 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டு இருப்பதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். புயல் எச்சரிக்கை காரணமாக நாகையை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் நேற்று 6-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.