பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை:கூடலூரில் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த வேண்டும்-கலெக்டரிடம், நகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை
பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை:கூடலூரில் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த வேண்டும்-கலெக்டரிடம், நகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை
கூடலூரில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் கூடலூர் நகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கையை மனுவை கொடுத்தனர்.
பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை
மாவட்ட கலெக்டர் அம்ரித்தை கூடலூர் நகராட்சி கவுன்சிலர்கள் வெண்ணிலா, வர்கிஷ், உஸ்மான், ஆபிதா பேகம், சத்தியசீலன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் நேற்று சந்தித்தனர். பின்னர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது:-
இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். அழகிய பசுமை பள்ளத்தாக்குகளை கொண்ட பகுதியாகவே கூடலூர் திகழ்கிறது.
ஆனால் இப்பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் இதுவரை அமைக்க வில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 2 சினிமா தியேட்டர்கள் இருந்தது. ஆனால் நாளடைவில் திருமண மண்டபமாகவும், ஓட்டலாகவும் மாறி விட்டது. இதனால் பொழுதைக் கழிப்பதற்கு பூங்கா, விளையாட்டு மைதானம், சினிமா தியேட்டர் இல்லாததால் பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
சுற்றுலா திட்டங்கள்
முதுமலை அல்லது ஊசி மலை காட்சி முனைக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள கூடலூரில் சுற்றுலா திட்டங்கள் இல்லை. ஆண்டுதோறும் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா தனியார் பள்ளிக்கூட மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கூடலூரில் பூங்கா அமைத்தால் பொதுமக்கள் மட்டும் இன்றி சுற்றுலா பயணிகள் வரத்தும் அதிகரிக்கும். வணிக ரீதியாகவும் கூடலூர் முன்னேற்றம் பெரும். மேலும் கோடை விழா மற்றும் வாசனை திரவிய கண்காட்சி நடத்தவும் பயன்படும்.
கூடலூர் மாக்கமூலா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் சர்வே எண். 745 அரசு நிலம் உள்ளது. இதில் பூங்கா அமைத்தால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சமாக பயன்படும். இதுவரை பொழுதுபோக்கு சுற்றுலாத் திட்டங்கள் இல்லாததால் அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பணியிட மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர். எனவே கூடலூர் பகுதி வளர்ச்சி பெற பூங்கா உள்ளிட்ட சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது. மனுக்களை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.